Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பசி, பணச் சிக்கல்... ஆப்கன் ஆட்சியில் தலிபான்களுக்கு அணிவகுக்கும் சவால்கள்!

ஆப்கானி்ஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு தற்போது முழுமையும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆட்சித் தலைவராக தலைவராக ஹெபதுல்லா தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆப்கனை ஆட்சி செய்ய தயாராகிவிட்ட தலிபான்கள் முன்னிலையில் இருக்கும் சவால்கள்தான் இப்போது மிகப்பெரிய ஐயப்பாடுகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, ஐநா வெளியிட்ட தகவல், தலிபான்களுக்கு கூடுதல் தலைவலியை கொடுத்திருக்கும். 38 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளத் தயாராகியுள்ள தலிபான்கள் எதிர்கொள்ள இருக்கும் முக்கிய சவால்களை விரிவாகப் பார்ப்போம்.

பசி: ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்கள் இந்த மாதம் தீர்ந்துவிடும். எனவே, நாட்டின் புதிய ஆட்சியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் பசி நெருக்கடியை முதன்மையாக கொண்டு செயல்பட வேண்டும்" என்று எச்சரித்திருந்தார்.

image

இதேபோல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான தலைவர் ரமீஸ் அலக்பரோ, "ஆப்கானிஸ்தானின் 38 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் உணவு சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை. ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் சமீபத்திய வாரங்களில் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிய மக்களுக்கு உணவு விநியோகித்துள்ளது. தற்போது ஆப்கனில் நிலவி வரும் குளிர்காலம் மற்றும் வறட்சியால் அங்கு தொடர்ந்து உணவளிக்க குறைந்தபட்சம் 200 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். செப்டம்பர் இறுதி வரையே எங்களால் உணவு வழங்க முடியும். அதன்பின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எங்களால் வழங்க முடியாது, ஏனென்றால் எங்களிடம் கையிருப்பு இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

விலைவாசி உயர்வு: மற்றொரு கவலையாக விலைவாசி உயர்வு இருக்கிறது. தண்ணீரும், உணவும் அங்கு ஆயிரங்களில் விற்படுவதாக தகவல்கள் சொல்கின்றன. காபூலின் தலைநகரில் கடை வைத்துள்ள முகமது ஷெரீப் என்பவர், "இங்குள்ள கடைகள் மற்றும் சந்தைகளில் பொருட்கள் உள்ளன. ஆனால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய கவலையாக மாறியிருக்கின்றன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், விலையை கட்டுப்படுத்த அரசு இல்லை என்றால், அது மக்களுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும்" என்று அச்சப்பட்டு தெரிவித்துள்ளார்.

வங்கி சேவை பாதிப்பு: இந்த விலையேற்றத்துக்கு மற்றொரு காரணம் வங்கி சேவை பாதிப்பு. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வங்கிகளிலும் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர்.

image

பொருளாதார நெருக்கடி: உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். நாட்டின் மொத்த வருமானத்தில் 20 சதவிகிதத்திற்கும் மேல் வெளிநாட்டு உதவிகள் மூலம் கிடைத்து வருகிறது. உள்நாட்டுப் போரை அடுத்து சமீபத்தில் நாட்டை தலிபான்கள் கையகப்படுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் 9.5 பில்லியன் டாலர் சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. போதாக்குறைக்கு சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அதன் நிதிக்கான அணுகலை நிறுத்தியது.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆப்கனில் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம், கொரோனா பாதிப்பு போன்றவற்றால் கடுமையான பொருளாதார பாதிப்பில் சிக்கி தவிக்கிறது. இதேபோல் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் நாணயத்தின் மதிப்பும் குறைந்து வருகிறது. அரசின் கையிருப்பில் இருந்த இருப்புகளும் போரின் காரணமாக வெளிநாடுகளால் முடக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் போன்ற கனிம வளம் தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆட்சி காலத்தில் செய்யப்பட்டு வந்த நிலையில், அது முடிவடையாதது, பெரிய ஆய்வுகள் செய்யப்படாதது போன்றவை சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னடைவை சந்திக்க வைக்கிறது. சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து தலிபான்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அது எப்படி நிறைவேறும் என்பது உடனடியாக தெரிந்துவிடாது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே அது இறுதி செய்யப்படும். அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். இதனால் அந்தக் கதவும் அடைக்கப்பட்டுள்ளது.

image

இப்போதைக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் கிடைக்கும் சர்வதேச நிதிதான் ஒரே தீர்வு. ஆனால், அங்கும் சில சிக்கல்கள் உள்ளன. சர்வதேச நிதியை கொண்டுவர தலிபான் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பது மிக முக்கியமான விஷயம். ஆனால், தலிபான் அமைப்பு இன்னும் ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படாததால் சர்வதேச சமூகங்கள் தலிபானை அங்கீகரிப்பதும் அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. இதனைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச நிதி கிடைக்க முன்வந்தாலும், தலிபான்கள் அதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது ஐயம். ஏனென்றால், போரின்போதே வெளிநாட்டு உதவிகளை நம்பியிருக்க போவதில்லை என்று அறிவித்தனர் தலிபான்கள். "போரில் ஈடுபடும்போது எங்கள் போராளிகள் ரொட்டி மற்றும் தண்ணீரை உண்டே உயிர் பிழைத்தனர். அவர்கள் வெளிநாட்டு நிதிகளை நம்பவில்லை" என்று அப்போதே வெளிநாட்டு யோசனையை அவர்கள் புறக்கணித்தனர்.

இப்போது எழுந்திருக்கும் கேள்வி, மில்லியன் கணக்கான ஆப்கன் குடிமக்கள் பல ஆண்டுகளாக அவர்கள் நம்பியிருந்த வெளிநாட்டு உதவியின்றி வாழமுடியுமா, மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்த சவாலை தலிபான் ஆட்சியாளர்கள் எப்படி கையாளப்போகிறார்கள் எனபதுதான். ஏற்கெனவே சர்வதேச நாடுகள் தங்களை ஏற்றுக்கொள்வதில் இருந்து நிர்வாகம் வரை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது தலிபான். சர்வதேச நாடுகளைத் தாண்டி பல ஆப்கானியர்களும் தலிபான்கள் இந்த சவால்களை எப்படி கையாள போகிறார்கள் என்பதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

- மலையரசு

தகவல் உறுதுணை: ஏபிசி நியூஸ், ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா

| தொடர்புடைய செய்திக் கட்டுரை > ஆப்கான் விமான நிலையங்கள் மூடல்: தரை வழி பயணமாக எல்லையை நோக்கி படையெடுக்கும் மக்கள் |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்