Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சங்கத்தமிழ் இலக்கியங்களை “திராவிடக்களஞ்சியம்” என வெளியிடுவதா? – வலுக்கும் எதிர்ப்பு

சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்’ என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத ‘திராவிடம்’ எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.

image

ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார். அந்த சங்கத் தமிழ்த் தொகுப்புக்கு “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டப் போவதாகவும் அதில் அறிவித்திருக்கிறார்.

சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் “திராவிட” என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு “திராவிடக் களஞ்சியம்” என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும், சங்கத் தமிழ் நூல்களைத் “திராவிடக் களஞ்சியம்” என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழி – தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயலாகும்! “அவன் கையைக் கொண்டு அவன் கண்ணைக் குத்து!” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் – தமிழர் – தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக “திராவிட” என்ற வடசொல்லைப் புகுத்தி வருகிறார். தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக் கூட அவர் “திராவிட மாடல்” என்று பெயர் சூட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ஸ்டாலின் அவர்கள் “திராவிடச் சிறுத்தை” என்று சிறப்புப் பெயர் சூட்டியதையும் இங்கு நினைவு கொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் திருமாவளவன் அவர்களை “எழுச்சித் தமிழர்” என்று அழைக்கிறார்கள். அதை “திராவிடச் சிறுத்தை” என்று மாற்றுகிறார் ஸ்டாலின்!

அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில் “திராவிடம்”, “திராவிடர்” என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராக பதவியேற்றவுடன் “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக் கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும் வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் “திராவிடத்தைத்” திணிப்பது என்ற தந்திரமாகத் தானே இதைப் பார்க்க முடிகிறது!

தமிழ்நாட்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு வந்த தமிழ் இலக்கியங்களில் தான் “திராவிட” என்ற சொல் இருக்கிறது. அசலாக “திராவிட” என்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னக மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை சமற்கிருத நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் “தந்திரவார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். இன்னும் உள்புகுந்து பார்த்தால், தென்னகப் பகுதிகளில் குடியேறிய பிராமணர்களை அழைக்க “திராவிடர்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னக பிராமணர்கள் – திராவிடர்கள்; வடநாட்டுப் பிராமணர்கள் – கௌடர்கள். இதுதான் வரலாறு!

தமிழ் இன உணர்வும், தமிழ்த்தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ் – தமிழினப் பெருமிதங்களை “திராவிட மாயை“யில் மறைக்கும் செயலை இனிமேலாவது தி.மு.க. கைவிட்டால் நல்லது. திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள தமிழறிஞர்களும், இன உணர்ச்சியுள்ள தமிழர்களும் தங்கள் தலைமைக்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தமிழை திராவிடமாகத் திரிக்கும் வேலையை கைவிடச் செய்ய வேண்டும்.

தமிழர்களின் இந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, சங்கத் தமிழ் நூல்களை பிடிவாதமாக “திராவிடக் களஞ்சியம்” என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத்தெரிவித்திருக்கிறார்.

image

இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சங்கத்தமிழ் நூல்களுக்குத் "திராவிடக் களஞ்சியம்" என்று இனமறைப்புத் தலைப்புக் கொடுக்காதே! "தமிழ்க் களஞ்சியம்" என்றே வெளியிடு!” எனத் தெரிவித்திருக்கிறார்

இதனைப்படிக்க: ஆக.31: கொடியங்குளம் கொடூர தினமும், காவல்துறையின் கடந்த கால 'வன்முறை' பட்டியலும்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்