யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசில் இரண்டாம் முறையாக இந்த வருடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஏழு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கம் எதிர்பார்க்கப்பட்டபடியே நடந்துள்ளது. முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர் உட்பட 7 பேர் யோகி அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா, யோகியின் அமைச்சரவையில் இணைந்தார். இவர் தவிர, பல்ராம்பூர் எம்எல்ஏ பல்துராம், ஓப்ரா எம்எல்ஏ சஞ்சீவ் குமார் கோண்ட், காஜிபூர் எம்எல்ஏ சங்கீதா பிந்த், மீரட் எம்எல்ஏ தினேஷ் கட்டிக், ஆக்ரா எம்எல்ஏ தரம்வீர் பிரஜாபதி மற்றும் பஹேரி எம்எல்ஏ சத்ரபால் கங்வார் ஆகியோர் மாநில அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதுவரை அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்த சமூகங்களின் அதிருப்தியை போக்கி, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதுதான் அமைச்சரவை விரிவாக்கத்தை முக்கிய நோக்கம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சில இடங்களில் சரிவை சந்தித்தது. அப்போதே சில சமூகங்கள் யோகி ஆட்சி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பாக பாஜக தலைமை சில ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அதில் பாஜக மீது பலமான அதிருப்தி நிலவுவதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. இதனை சரிகட்ட இரண்டாம் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப, உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் மூத்த தலைவர்களுடன், மத்திய தலைமை தலைவர்கள் முன்னிலையில் சில தினங்கள் முன் ஆலோசனை நடத்தினர். அதன்படியே, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் தொடர்பாக பேசும் பாஜக மாநில துணைத் தலைவர் விஜய் பகதூர் பதக், "அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமநிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடிக், பிந்த், பிரஜாபதி போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அமைச்சரவை விரிவாக்கத்தில், மேற்கு உ.பி.யின் ஷாஜகான்பூர், ஆக்ரா, மீரட் மற்றும் பரேலி மாவட்டங்களில் இருந்து தலா ஓர் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
புதிய ஏழு அமைச்சர்களில் ஒருவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், மூன்று பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், மாநில அரசியலில் முதல் முறையாக, புர்ஜி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எம்எல்சி ஆக்கப்பட்டார்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அதிகம் பேசப்படும் நபர் ஜிதின் பிரசாதா. காங்கிரஸின் பிராமண சமூகத்தின் முகமாக அறியப்பட்டவர் ஜிதின். ராகுல் காந்தி குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான நட்புகொண்ட ஜிதின் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவர் சமீபத்தில் தான் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார். சமீபகாலமாக பிராமண சமூக மக்களிடம் யோகி அரசு கடும் அதிருப்தியையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டுவந்தது. பாஜகவின் முக்கிய வாக்குவங்கியாக இருக்கும் பிராமணர் சமூகத்தின் கோபத்தின் தணிக்கும் பொருட்டு ஜிதின் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
``பிராமணர்கள் மட்டுமல்ல, தற்போது முக்கியவதும் கொடுக்கப்பட்டிருக்கும் குர்மி, பிந்த், பிரஜாபதி, கோண்ட் போன்ற சமூகங்கள் கடந்த சில தேர்தல்களாக பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்து வருகின்றன. ஆனால், யோகி ஆட்சியில் இந்த சமூகங்கள் சில அடக்குமுறைகளை எதிர்கொண்டதால் வாக்கு வங்கி சரியும் நிலை இருந்ததது. இந்தப பயத்தின் காரணமாகவே தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தை கையிலெடுத்திருக்கிறது" என்றுள்ளார் அம்மாநில அரசியல் பார்வையாளர் ஒருவர்.
எதிர்க்கட்சிகளும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து யோகி அரசை விமர்சித்துள்ளன. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ``உரிமைகள் பறிக்கப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக நடத்தப்படும் நாடகம் இது... இந்த அமைச்சர்களின் பெயர்ப் பலகைகளின் மை காய்வதற்குள், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும்" என்றுள்ளார். உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத், ``அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் யோகி அரசு இந்த தந்திரங்களால் பொதுமக்கள் ஏமாறமாட்டார்கள். பாஜக தேர்தலில் பெறப்போகும் தோல்வியின் பயத்தின் வெளிப்பாடாகவே இந்த விரிவாக்கத்தை பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திக் கட்டுரை > மோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்