செப்டம்பர் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் "Money Heist" இணைய தொடரை காண்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது ராஜஸ்தானில் உள்ள 'வெர்வ்லாஜிக்" என்ற தனியார் நிறுவனம்.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பானிஷ் தொடர் "Money Heist'. வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்தொடரின் நான்காவது சீஸன் இந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்தாண்டு இந்தியர்களுக்கு அறிமுகமான இந்தத் தொடருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இப்போது இந்தத் தொடரின் அடுத்த பாகம் செப்டம்பர் 3 இல் வெளியாக இருக்கிறது.
இந்தத் தொடரின் பிரதான கதாப்பாத்திரமான பிரொபசருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல மற்ற கதாப்பாத்திரங்களான டோக்கியோ, டென்வர், பெர்லின்,மாஸ்கோ ஆகியோருக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வெர்வ்லாஜிக் என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது Money Heist செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு ‘நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்’ என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. பலரும் பொய்க் காரணங்கள் கூறி அன்று விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கவே விடுமுறை அளித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இப்போது நிறுவனத்தின் இந்த அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்