Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எளியோரின் வலிமைக் கதைகள் 2 - "மூணு வருஷத்துல ரூ.10 லட்சம் போனாலும் விவசாயத்தை கைவிடல!"

பயணம் தொடர்ச்சியாக நீடித்தால் உற்சாகம் இருக்காது. ஆங்காங்கே களைப்பு ஏற்படும். களைப்பு ஏற்படும்போதெல்லாம் ஓய்வு தேடும் உடல். அப்படி ஒரு பயணத்தின்போதுதான் உடல் ஓய்வு தேடியபோது எதிரே ஒரு விவசாயி ஏர் உழுது கொண்டிருந்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும் அதன் அடையாளமே விவசாயம்தான். ஊருக்குள்ளே நுழைந்ததும் கண்ணில் படுகிற ஏரி. அதைத் தாண்டியதும் காணப்படுகிற கிணறு. ஊருக்கு நடுவில் இருக்கும் குளம்... இதெல்லாம் விவசாயத்தின் அடையாளம்.

அன்றைக்கு அந்தக் கிராமத்தில் நான் சந்தித்த விவசாயி முருகன். பார்க்க ஒல்லியான உருவம். நரம்புகள் வெளியே தெரியும் உடல் வாகு. சவரம் செய்யாத முகம். உடலில் அங்கு இங்குமாக சேறு பூசிய நிலையில் உற்சாகமாக இருந்தார். பேச்சு கொடுத்தேன்... "விவசாயம் ஓரளவுக்கு இப்ப பரவாயில்லையா? நல்ல லாபமா?" என்றேன்.

image

"எங்க தாத்தா லாபத்தை பார்த்து விவசாயம் செய்யலை, எங்கப்பா பெருசா விவசாயத்தில சம்பாதிச்சு வீடு, பங்களான்னு கட்டலை. நானும் இதுவரைக்கும் கணக்கு பார்க்கல தம்பி. மனிதனுக்குப் பசி இருக்கிற வரைக்கும் விவசாயம் அழியாது. சாகுற வரைக்கும் உணவு தேவை உலகத்தில இருக்கும். எத்தனை தொழில் இருந்தாலும் எல்லோருக்கும் உணவளிக்கற மேன்மையான தொழில் விவசாயம் நாம உயிர் வாழ சாப்பிடுகிற உணவிலிருந்து, உடுத்தும் உடை வரைக்கும் வேளாண்மை மூலமாதான் கிடைக்குது. அதுல நாம எல்லோருக்கும் பயன்படுறோம் என்கிற நிம்மதி. இதுல போய் லாபம் என்ன பார்க்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்தவர், "விவசாயம் இன்னிக்கு ஒரு காட்சிப் பொருள் போல ஆகிடுச்சு, உன்னை மாதிரி ரெண்டு பேரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கிட்டு பேட்டி எடுக்கிற மாதிரி. நீங்க கேக்குறதுக்கு நாங்க பதில் சொல்றோம், இல்லையா அது மாதிரிதான் விவசாயம் நம்ம கிட்ட இருக்குற தண்ணிக்கு தேவையான மாதிரிதான் பயிரிடுவோம். அஞ்சு, ஆறு வருஷத்துக்கு முன்னாடி பெருசா மழை ஒண்ணும் இல்லை. கம்பு, கேழ்வரகுன்னு ஏதோ விளைவிச்சோம். கிணத்தில் தண்ணீர் இல்லை. வானம் பார்த்துதான் விதைச்சோம். ஏதோ அப்போ இப்போன்னு பெய்ஞ்ச மழையில பயிர் வளர்ந்தது. இப்ப கடைசியா மூணு வருஷம் பரவாயில்லை. நல்ல மழை. தேவையான தண்ணீர் நினைக்கிற பயிர் செய்கிறோம். என்னா... விலைதான் இல்லை.

image

ஒரு ஏக்கர் நெல் பயிர் வைக்க, பராமரிக்கன்னு நெல் அறுவடை செய்ற வரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் செலவாயிடும். 75 கிலோ நெல்லுக்கு 800 ரூபாய்தான் கிடைக்கும். அதுவே பெரிய விஷயம். 30 மூட்டை விளையும், ஒரு ஏக்கருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்துக்கோங்க. ஒருமுறை நாத்து நட்டா ஐந்து மாதம் ஆகும் அறுவடைக்கு. நான் மட்டும் இல்லைங்க, எங்க வீட்டுல மட்டும் நாலு பேர் இந்த வேலையை செய்கிறோம்.

விவசாயம் திசைமாறி முப்பது வருஷம் ஆயிடுச்சு. அப்பல்லாம் மாடு, கலப்பையாலதான் நிலத்தை உழுதோம். நாட்டுக் கலப்பை, சட்டி கலப்பை, ஒரு வழிக் கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பைன்னு பலவகை கலப்பை இருந்துச்சு. மண்ணுக்கு தகுந்த மாதிரியும் பயிருக்கு தகுந்த மாதிரியும் ஏர் உழுதோம். இப்ப எல்லாம் டிராக்டர் வந்துருச்சு. என்ன கலப்பையில ஏர் உழுதோம்னே தெரியுதே இல்ல.

image

இவ்வளவு சிரமப்பட்டு விவசாயம் செய்து பயிர் வெச்சாலும் விலை இன்னும் ஒண்ணு இருக்குது இல்லை... அது விவசாயிகளுக்கு இல்லாமலேயே போய்விடும். விவசாயிகளோட நிலைமைய புரிஞ்சுகிட்டு, அவர்களுடைய தேவையை தெரிஞ்சுகிட்டும் கூட விளைபொருட்களுக்கு அடிமாட்டு விலைதாங்க கொடுக்கிறாங்க. விவசாயி விளைவிக்கிற நெல்லை கிலோ 10 ரூபாய்க்குள்ள வாங்கிக்கிட்டு திரும்ப 40 ரூபாய்க்கு மேல விவசாயிகிட்ட அரிசியை விக்கிற நிலைமைதான் இன்னைக்கு இருக்கு. என்ன பண்றது "உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"ன்னு சும்மாவா சொன்னாங்க" என்று சொல்லிட்டுப் புறப்படத் தயாரானார் விவசாயி முருகன்.

சுழன்றும் ஏர் பின்னது உலகு ஆதலால்.
உழன்றும் உழவே தலை.

- விவசாயம் இல்லாமல் போனால் பசி, பஞ்சம், பட்டினி என்று மக்கள் திண்டாடும் நிலைமை உருவாகிவிடும் என்கிறார் வள்ளுவர்.

பழங்காலங்களில் வேட்டையாடி வாழ்ந்த மனித சமூகம் பிற்காலங்களில் ஆற்றங்கரையோரத்தில் நிலங்களை சீர்செய்து பயிர்களை விளைவிக்கும் முறைகளை அறிந்து கொண்டது. உதவிக்கு விலங்குகளை வைத்துக்கொண்டான். அதுவே பிற்காலத்தில் விவசாயமானது. நிலத்தை சீர்திருத்தினான். தண்ணீர் பயன்படுத்தும் முறையை அறிந்துகொண்டான். இவை அனைத்தும் யாரோ சொல்லிக் கொடுக்கவில்லை. அனுபவத்தில் அவனே தெரிந்துகொண்டான்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்கள்தொகை. இதனால் அதிகரிக்கும் உணவுத் தேவை. இன்றைக்கு பல நாடுகளில் வறுமை தலை விரித்தாடுகிறது. விவசாயத்தை கைவிடும் நாடுகளின் நிலைமை எதிர்காலத்தில் இப்படித்தான் ஆகும். தமிழகத்தில் மட்டும் 22 லட்சம் ஹெக்டேர் நிலம் பாழ்பட்ட நிலமாகவே இருந்து வருவதாக தரவுகள் கூறுகின்றன. நகர விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்கள் சுருங்கி வருகிறது. ஆனால் மக்கள் தொகையோ பெருகி வருகிறது. ஆனால், விவசாயிகளின் பிரச்னைகள் மட்டுமே அப்படியே நீடிப்பதை அறிகிறோம். விவசாயி முருகனின் புலம்பல்களுக்குப் பின்னால் உள்ள நிலவரம் குறித்து அறிய நினைத்தேன். அதற்கேற்ற ஒருவரை நாடினேன்.

ஆதி ராமானுஜம்... கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்கை விவசாயம்தான். இதற்கு முன்னர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர். விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர். மேலும், ஊடகத்துறையில் எம்.ஏ பட்டமும் பெற்றவர். விவசாயம், விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டேன்.

"மூணு மாசம், ஆறு மாசம்ன்னு கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணி வெளைஞ்ச பொருளை சந்தைக்கு கொண்டு வந்தா, விலையை இடைத்தரகர்களும் வியாபாரிகளும்தாங்க நிர்ணயிக்கிறாங்க. அரசும் கூட அதுக்கு துணைபோவுது. இப்படி விலை நிர்ணய உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?

ஒரு பயிர் விளைவிக்க, இதுல எவ்வளவு செலவாகும் அப்படின்னு கணக்கு விவசாயிக்குதாங்க தெரியும் அது விளைவிக்க எவ்வளவு சிரமம்னும் விவசாயிக்குதாங்க தெரியும். இப்படி இருக்கும்போது இந்த பயிர் இவ்வளவுதான் விக்கும் அப்படின்னு முடிவு செய்கிற இடத்துல இடைத்தரகர்களும் வியாபாரிகளும்தான் இருக்கிறாங்க இதை அரசாங்கமும் கண்டுக்காம இருக்குன்னு சொல்லலாம். அதனாலதான் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் அப்படின்னு சொல்றேன்.

image

அரசாங்கம் ஒவ்வொரு நகர்புறங்களை ஒட்டியும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அமைச்சிருக்கு. அரசு அங்கு விவசாயி விக்கிற பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்கு கிடைக்குது என்று சொல்லலாம். ஆனா, அந்தப் பணமும் முழுசா விவசாயிகள் கைக்கு கிடைக்கிறது இல்லை. பொருளை கொள்முதல் செய்கிற வியாபாரிகள், விவசாயிகள்கிட்ட சிறுக, சிறுக பணம் கொடுக்கறாங்க. அதனால அது செலவாகி போகுமே தவிர, மொத்தமா எடுத்துக்கிட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இப்படி எல்லாம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

விலை நிர்ணயத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு சந்தைப்படுத்தலில் விவசாயிகள் தோல்வியடைந்தாங்கன்னு சொல்லலாம் சாதாரணமா எந்த ஒரு பொருளானாலும் இப்ப எல்லாம் விளம்பரம் தேவைப்படுது. இயற்கையாகவே உணவுப் பொருளை தயார் செய்து தர்ற எங்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் இல்லை. ஆனால், ரசாயனம் உரம் கலந்த ஒரு பொருட்களை விற்பதற்கு புதிய விளம்பரங்கள் இருக்குது. ஆனால், மக்கள் விளம்பரங்களை நோக்கி போறாங்க. தரமான பொருட்களை நோக்கி வரவில்லை. அதனால் விளம்பரம் அப்படிங்கறது சந்தைப்படுத்த ரொம்ப முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவரைக்கும் மூணு வருஷத்துல பத்து லட்ச ரூபா இழந்திருக்கேன், இந்த விவசாயத்துல. ஆனாலும் விவசாயத்தை நான் விடுவதாயில்லை. அரசாங்கமும், விவசாயமும், விவசாயிகளும் கூட்டு சேர்ந்து விலையை விவசாயிகளை நிர்ணயிக்க வைக்கணும். அப்பதான் விவசாயத்தை நாம வெற்றிபெற வைக்க முடியும்னு நான் நினைக்கிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படி விலை நிர்ணயம், தர நிர்ணயம் எல்லாத்தையும் இடைத்தரகர்கள் உள்ள புகுவது விவசாயிகளை பெருசா வஞ்சிக்கிறதுன்னு நான் நினைக்கிறேன். அரசு உதவி செய்யும் அப்படின்னு முழுக்க முழுக்க நாம நம்பியிருக்கிறது, நமக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. அதனாலதான் விவசாயிகளை ஒன்று திரட்டி, விவசாயி விளைவிக்கிற பொருளை எவ்வளவு செலவு செய்து அதை விளைவிக்கிறார்கள், அதற்கு மேல ஒரு தொகையை வச்சு அந்தப் பொருளை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வர்றோம்.

சாதாரணமாக விவசாயம் செய்வது என்பது குடும்பத்தோடு சேர்ந்து செய்கிற ஒரு தொழில். நாலு பேர் ஒரு குடும்பத்தோட வேலை செய்றாங்க. அப்படி என்றால் குறைந்தபட்சம் ஒரு ஆளுக்கு மாதம் 10,000 ரூபாய் கிடைக்கும். அப்படி கிடைத்தா மட்டும்தான் விவசாயம் முன்னுக்கு வரமுடியும். அதனால முறையாக சந்தைப்படுத்தினா, இந்தத் தொகையை நம்மளால ஈட்ட முடியும்ன்னு நான் நம்புறேன். அனுபவரீதியாக அதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்றார் ஆதி ராமானுஜம்.

பார்ப்போம். வேற என்ன சொல்ல?

- ஜோதி நரசிம்மன்

| முந்தைய அத்தியாயம்: எளியோரின் வலிமைக் கதைகள் 1 - "நாங்க உயிரா வடிக்கிறது பொம்மை இல்லைங்க... மரச்சிற்பங்கள்!" |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்