Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய பாரம்பரிய இடங்கள் 4: மத ஒற்றுமையின் சாட்சி - எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அவர்களுக்குப் பெருமையைச் சேர்த்தது அவர்களின் கட்டுமான நுட்பங்கள்தான். அதிலும், ஆன்மிகத் தலங்களின் கட்டடக் கலையில் ஒரு தனிச்சிறப்பே இருந்துள்ளது. அனைத்து நாட்டு மன்னர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்மிகத் தலங்களை எழுப்பி வந்தனர். அந்தப் போட்டியிலும் விதவிதமான கற்பனைத் திறன்களையும் வெளிப்படுத்தி வித்தியாசமான அமைப்பில் ஆன்மிகத் தலங்களை வடிவமைத்து வந்தனர்.

ஆன்மிகம் பொழியும் சீரடி முதல் ஆர்ப்பரிக்கும் சப்தங்களுடன் கூடிய டிஸ்கோ மின்னும் மும்பை வரை, மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வகையான கலாச்சாரம், கலைகள், கட்டடக் கலைகளுக்கு பெயர் பெற்றது. அதுமட்டுமின்றி, பாசுந்தி முதல் வடா பாவ் வரை வகை வகையான சாட் உணவுகளின் சுவைகளையும் ஊற்றாய் கொடுப்பது மராட்டிய பூமி. மேலும் குப்தர்கள், லோடிகள், மராத்தியர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், யாதவர்கள் என்று பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் வீர தீர சரித்திரத்தையும் தன்னுள் கொண்டது.

வீரம் என்றாலே வீர சிவாஜி தான். அப்படிப்பட்ட வீர சிவாஜியை கடவுள்போல் போற்றி, அவருக்கு மரியாதை செய்யும் ஊர்தான் மகாராஷ்டிரம். வீரம் பிறந்து, வளர்ந்து, செழித்த ஊர் என்றே சொல்லலாம். இன்றும் வீர குணம் கொண்ட இவர்கள் இந்திய ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகித இடத்தை மராட்டியர் பிடித்து விடுகின்றனர். வீரத்திற்கு மட்டுமல்ல, கலை நயத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு ஆதாரமாக, கலை ஓவியங்களையும், கூடங்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளது மகாராஷ்டிரா.

image

பழைமையும் பெருமையும் வாய்ந்தவை இந்தியாவின் கலைப் படைப்புகள். இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா. ஒரு சிறந்த கலை, மனிதனின் இருப்பை எதோ ஒரு வகையில் இந்த உலகில் அவற்றை நிரந்தரமாக்குகின்றது. இதனால் கலைஞர்கள் மனித வாழ்வைத் தொடர்ந்து, இலக்கியம், ஓவியம், சிற்பங்கள் என பல்வேறு வடிவங்களில் தங்களின் பங்களிப்பைப் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பதிவு செய்யப்படும் கலையின் வடிவங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிற்கு சாட்சியாக இருக்கின்றன.

image

அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள் என வெறும் கற்களையும், மலைகளையும் தங்கள் உளிகளால் காவியங்கள் ஆகியுள்ளனர். மகாராஷ்டிரம் பல்வேறு கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாது பல்வேறு மதங்களுக்கும் சொந்தமான ஊராகும். மதங்கள் அங்குத் தோன்றாவிட்டாலும் மதங்களுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுத்த ஊர். அப்படி புத்த மதம், சமணம், சைவம் என்று முப்பெரும் மதச் சின்னங்களை ஒரே இடத்தில் காணலாம் என்றால் ஆச்சரியம் இல்லையா? ஓர் இடத்தில் இரு மதங்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட சண்டை போடும் இதே நாட்டில், இந்த ஒற்றுமை வியப்பு தானே..!? ஆனால், இவை ஒரே காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், அடுத்தடுத்த காலத்திலும் பழைய மதச் சின்னங்களைச் சிதைக்காமல் அதன் அருகிலேயே புதியனவற்றைக் கட்டியுள்ளனர் என்றால், இவை கொண்டாடப்படக்கூடியவை தானே?

image

அப்படிக் கொண்டாடத் தகுந்த இடம்தான் இன்று நாம் வார்த்தை வர்ணனையால் உலாவர இருக்கும் இடமான எல்லோரா குகைகள். இனி வார்த்தையின் வழி பயணிப்போமா..?

image

உலக அதிசயங்களாகத் திகழும் இந்தக் கலைக் கோயில்களை 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், கலாச்சாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் எல்லோரா குகைகள் சேர்க்கப்பட்டது.

image

வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் மலைதான் விந்தியா சாட்புரா மலைகள். மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையின் முடிவில் குறுக்கே அமைந்த சரணாந்திரி மலைகளில் இருக்கிறது எல்லோரா.

எல்லோராவில் 2 கி.மீட்டர் சுற்றளவுக்கு மொத்தம் 34 குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. இந்த குடைவரைக் கோயில்கள் அமைக்கும் சிற்ப வேலைகள் 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. முதல் பன்னிரண்டு குடைவரைக் கோயில்கள் பௌத்தக் கோயில்கள் உள்ள குகைகளாகும். இவை, 6-ஆம் நூற்றாண்டிலிருந்து 8-ஆம் நூற்றாண்டுகளின் இடையில் தோண்டியெடுக்கப்பட்ட ஆரம்ப கால குகைகள். இங்கு பல அடுக்குகளைக் கொண்ட துறவிகளின் தங்குமிடங்கள் அமைந்துள்ளன.

image

அடுத்தடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். இவை 7 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே அமைக்கப்பட்டவை. மீதமிருக்கும் ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது. இவை, 9 முதல் 12-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கடைசிக் கட்டத்தில் அமைக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வழிபாட்டில் இருந்தன என்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்கள் மூன்று மதங்களுக்கும் சமமான ஆதரவை அளித்து மூன்று மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்து தங்களின் மதக்கல்வியையும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.

image

புத்தக் குழுவின் குகைகளில் குகை எண் 10, 11 மற்றும் 12 மிகவும் முக்கியமானவை. இந்தக் குகைகள் பௌத்தத்தின் வஜ்ராயன வடிவத்தின் வளர்ச்சியையும், புத்த தெய்வங்களையும் குறிக்கின்றன. மிகவும் புகழ்பெற்ற குகை எண் 10, "தச்சரின் குகை" என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குகையின் நடுவில் 15 அடி உயரமுள்ள புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள சில புத்தர், போதிசத்துவர் போன்றோரின் உருவங்கள் மரத்தால் செய்தது போன்று தோற்றமளிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

image

பிராமணி குழுவின் முக்கிய குகைகள் குகை 15 (தசாவதாரம் அல்லது பத்து அவதாரங்களின் குகை), குகை 16 (கயிலாசநாதர் கோயில், மிகப்பெரிய ஒற்றைக்கல் கோவில்), குகை 21 (ராமேஸ்வர) மற்றும் குகை 29 (தூமர் லீனா) குகைகள். இவற்றில், 16-ம் எண் குகைக் கோயிலான கயிலாசநாதர் கோயில், கட்டமைப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. பிரமாண்டமான ஒரே கல். அதைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில். சுமார் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயில் மேலிருந்து கீழ் நோக்கிச் செதுக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்ட பிரமிப்பூட்டும் இந்தக் கோயிலுக்கு, வெளியில் இருந்து ஒரு சிறு கல் கூடக் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.

image

கயிலாசநாதர் கோயிலை உருவாக்கியவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி.757 முதல் கி.பி.773 வரை ஆகும். அதுமட்டுமின்றி, இந்த ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. பார்வதியோடும் நந்தியோடும் சிவன் இருக்கும் கயிலையை, ராவணன் தூக்கி எறிய முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர, அந்த 9 தலைகளையும் ஈசன் மாலையாகக் கோத்து அணிந்திருக்கும் சிற்பமும் மிகவும் சிறப்புப் பெற்றது. பல்வேறு காலங்களைச் சேர்ந்த அழகிய ஓவியங்களின் சிதறல்கள் இந்தக் கோயில் மண்டபத்தின் கூரையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

American Gegoraphy Portal – American Geography Portal

ஜெயின் குகைகள் (குகைகள் 30 - 34) மிகச்சிறந்த, நுட்பமான சிற்பங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. சமணத்தின், திகம்பர பிரிவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த ஓவியங்களும் இங்கு உள்ளன. சமணக் குகைகள் சமணத் தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சோட்டா கைலாசு, இந்திர சபா, சகன்னாத சபா ஆகிய கோவில்கள் முக்கியமானவை. 

image
எல்லோரா குகைகளின் குழுக்களில் மிகவும் பழமையான குகை 21-ஆம் குகையான ரமேஸ்வரர் குகை. இது, கிபி 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சமய நூல்களின் காட்சிகளைச் சித்தரிக்கும் வகையில் உள்ளது. நுழைவாயிலிலும் உள்ளே ஒரு நந்தி சிற்பம், இசைக் கலைஞர்களால் சூழப்பட்ட ஒரு பெரிய நடராஜர் மற்றும் எருமை வடிவ அரக்க மன்னனைக் கொன்ற துர்கா சிலையும் உள்ளது. யானைகள் மற்றும் மிதுனா உருவங்கள் ரமேஸ்வரர் குகையின் சிறப்புகளாகும்.

image

ராவண-கி-கை என்று அழைக்கப்படும் 14-ம் குகையானது, கி.பி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது இந்துக்களின் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் குகையில் ஒரு பெரிய தூண் முற்றமும், அகலமான நடைபாதை மற்றும் உட்புற கருவறைக்குச் செல்லும் 16 அலங்கரிக்கப்பட்ட தூண்கள் கொண்ட ஒரு மண்டபமும் கொண்டது. உட்புற சுவர்களை ஐந்தாகப் பிரித்து அலங்கரித்துள்ளனர். முற்றத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் சைவ மற்றும் வைணவ நம்பிக்கையின் சிற்பக் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வடக்கு சுவரில் பவானி, கஜலட்சுமி, வராகா, விஷ்ணு மற்றும் லட்சுமியின் சிற்பங்கள் உள்ளன.

image

தெற்குச் சுவரில் மகிசாசுரமர்தினி, சிவபெருமான் மற்றும் பார்வதி, நடராஜர் மற்றும் அந்தகாசுரன் ஆகியோரின் உருவங்களும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவரின் தெற்குச் சுவரில் இந்தச் சிற்பக் காட்சிகளின் பக்கவாட்டில் சப்த மாதர் என்று அழைக்கப்படும் ஏழு தெய்வீகத் தாய்மார்கள் (பிரம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி) அவர்களின் வாகனமாகச் சொல்லப்படும் உயிரினங்களுடன் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன.வரலாற்றில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் மிகச்சிறந்த விருந்தாக அமையும் இந்த 34 குடைவரைக் கோயில்களிலும் உள்ள சிற்பக்கூட்டம்.

image

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு...

ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் எல்லோரா. சென்னையிலிருந்து 1,199 கி.மீ. தொலைவில் உள்ளது. விமானம், ரயில் மூலம் ஔரங்காபாத் அடைந்து அங்கிருந்து பேருந்துகள் மூலமாக எல்லோரவை அடையலாம். எல்லோராவிலிருந்து புனே 255 கி.மீ தொலைவிலும், ஷீரடி 109 கி.மீ தொலைவிலும் இருக்கின்றன. எல்லோரா செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலச்சூழல் சிறந்ததாக இருக்கும். காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் எல்லோரா குகைகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை. வாரத்தின் மற்ற நாட்களில் எல்லோரவை ரசிக்கலாம்.

image

கட்டணம்: எல்லோரா குகைகளைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 550 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் https://asi.payumoney.com/tickets என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

image

வரலாறு, பயணம், இந்தியத் தொன்மை, சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும்  மிகச்சிறந்த விருந்தாக அமையும் இந்த 34 குடைவரைக் கோயில்களை, நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டும்.

(உலா வருவோம்...)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 3: அஜந்தா குகைகள் - புதருக்குள் மறைந்திருந்த பொக்கிஷங்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்