Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 5: டயன் கிரீன் - 'கிளவுட் கம்ப்யூட்டிங்' முன்னோடி!

அந்த இரண்டு இளைஞர்களும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கிய அதே 1998-ம் ஆண்டில்தான் டயன் கிரீன் (Diane Greene) தனது பேராசிரியர் கணவருடன் இணைந்து தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினார். அந்த இளைஞர்கள் வேறு யாருமல்ல, உலகம் நன்கறிந்த கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டதாரிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர்தான்.

கிரீன் உருவாக்கிய விஎம்வேர் (VMware) நிறுவனம் கூகுள் அளவுக்கு பரவலாக அறியப்பட்டதோ, பெரியதோ இல்லை என்றாலும், கூகுள் போலவே தனது துறையில் முன்னோடி நிறுவனம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆம், இணையத் தேடலில் எப்படி கூகுள் முன்னோடி நிறுவனமாக விளங்குகிறதோ, அதேபோல கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) துறையில் 'விஎம்வேர்' முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. அதுமட்டும் அல்ல, பின்னாளில் கூகுள் நிறுவனம் கிளவுட் சேவையில் கோட்டை விட்டதாக உணர்ந்து, இந்தப் பிரிவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தபோது, கூகுளின் கிளவுட் சேவை பிரிவுக்கு தலைமையேற்க கிரீன் அழைக்கப்பட்டார்.

image

கூகுள் கிளவுட் பிரிவின் தலைமைப் பொறுப்பில் கிரீன் சில ஆண்டுகள்தான் இருந்தார் என்றாலும், இந்தப் பதவிக்கு அவர் வந்தது இணைய உலகில் மிகப்பெரிய செய்தியாக அமைந்தது. அதற்கு காரணம், கிளவுட் சேவையில் கிரீனுக்கு இருந்த புரிதல் மட்டுமல்ல, சி.இ.ஓ எனும் தலைமை அதிகாரி பொறுப்பில் அவருக்கு இருந்த அனுபவமும் ஆற்றலும்தான்.

ஆம், கிரீன் வர்த்தக உலகின் செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் ஒருவராக கருதப்படுகிறார். முன்னணி வணிக இதழான 'வால்ஸ்டீரிட் ஜர்னல்' அவரை வர்த்தக உலகின் கவனிக்க வேண்டிய ஐம்பது பெண்களில் ஒருவராக பட்டியலிட்டுள்ளது. மற்றொரு வணிக இதழான 'ஃபார்டியூன்' அவரை வர்த்தக உலகின் 50 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது. இதேபோல வேறு பல பட்டியல்களிலும் கிரீன் இடம்பெற்றிருக்கிறார். இப்போதும் கூட, புகழ்பெற்ற எம்.ஐ.டி கார்ப்பரேஷனின் தலைவராக இருக்கிறார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி எனும் சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

image

இப்படி வர்த்தக உலகில் பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் கிரீனின் தலைமைப் பண்பும், தொழில்நுட்ப புரிதலுமே விஎம்வேர் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 1998-ல் புரட்சிகரமானதாக கருதப்பட்ட தொழில்நுட்ப சேவையை அறிமுகம் செய்து, அதன் மூலம் 'விம்வேர்' நிறுவனத்தை இன்றைய கிளவுட் சேவையின் முன்னோடியாக அவர் உருவாக்கினார். 'விஎம்வேர்' விர்ச்சுவலைசேஷன் எனும் மெய்நிகர் மென்பொருள் சேவையை வழங்கினாலும், இந்த சேவையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட சேவையாகவே கிளவுட் சேவை அமைகிறது.

மெய்நிகர் மென்பொருள் சேவையின் முக்கியத்துவத்தையும், கிளவுட் சேவையுடனான அதன் தொடர்பை தெரிந்துகொள்வதற்கு முன், கிரீனின் வாழ்க்கைப் பயணத்தையும் திரும்பி பார்த்துவிடலாம். அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள அன்னாபோலிசில் பிறந்து வளர்ந்த கிரீன், மெக்கானிகல் துறையில் பொறியியல் பட்டம் பெற்று பின்னர் கடல்சார் கட்டமைப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

மீனவ பெண் போல, அலை கடலோடு பிறந்து வளர்ந்தவர் என்பதால் கிரீனுக்கு அலைச்சறுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. சும்மாயில்லை, இந்த விளையாட்டில் சாம்பியனாகவும் இருந்தார். முதலில் அவர் ஒரு கடல்சார் பொறியியல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஏற்கெனவே கடலோடு நெருக்கமாக இருந்தவர், கடலுக்கடியில் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவரது நிறுவனம் 'பெண்கள் எல்லாம் அவ்வாறு பணிபுரிய அனுமதி இல்லை' என்றதும், அந்த வேலையே வேண்டாம் என உதறிவிட்டார்.

அதன்பிறகு கம்ப்யூட்டர் அறிவியலில் இரண்டாம் முதுகலை பட்டம் பெற்றவர் 'சைபேஸ்', 'சிலிக்கான் கிராபிக்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். பெர்க்லி பல்கலை.யில் படித்துக்கொண்டிருந்த போதுதான் அவர் வருங்கால கணவர் மெண்டல் ரோசன்பிளம்மை சந்தித்தார்.

image

இதனிடையே சொந்தமாக இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் உருவாக்கியிருந்தார். அவர் உருவாக்கிய விஎக்ஸ்டிரீம் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. மைக்ரோசாஃப்டின் மூவிபிளேயர் சாதனத்திற்கு இந்த நிறுவனமே அடிப்படையாக அமைந்தது.

அலைச்சறுக்கு விளையாட்டு போன்ற சாகச விரும்பியான கிரீன் வாழ்க்கையிலும் அதேபோன்ற சாகசத்தை எதிர்பார்த்ததால் பணிச் சூழலில் அலுப்பை உணர்ந்தார். இந்த நிலையில்தான் அவரது கணவர், ஆய்வு மாணவர்களோடு தான் உருவாக்கியிருந்த புதிய தொழில்நுட்பத்தை வர்த்தக நோக்கில் சேவையாக கொண்டுவர மனைவியின் உதவியை நாடினார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த ரோசன்பிளம், மெய்நிகர் மென்பொருள் சேவையை உருவாக்கியிருந்தார். மெய்நிகர் மென்பொருள் என்பதை கம்ப்யூட்டரில் வன்பொருளுக்கும், மென்பொருளுக்கும் இடையில் மெய்நிகர் திரை போல அமையும் மென்பொருள் என புரிந்துகொள்ளலாம். இந்த மெயநிகர் மென்பொருள் கம்ப்யூட்டரை மயக்கத்தில் ஆழ்த்தி, அதில் வழக்கமாக இயங்கக் கூடிய இயங்கு தளம் மட்டும் அல்லாமல், மேலும் சில இயங்கு தளங்களை இயக்க அனுமதிக்கிறது.

ஆக, ஒரே கம்ப்யூட்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்கள் செயல்பட இந்த சேவை வழி செய்தது. அதேபோல ஒரே கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்களையும் உருவாக்கி கொள்ளலாம். இன்னும் எளிதாக புரிய வேண்டும் என்றால், ஒரு கம்ப்யூட்டருக்குள் மேலும் பல கம்ப்யூட்டர்களை உருவாக்கி இயக்கலாம். எல்லாமே மெய்நிகர் கம்ப்யூட்டர்கள்.

அதாவது, ஒற்றை கம்ப்யூட்டர் ஆற்றலில், ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இயக்கலாம். இதுவே மெய்நிகராக்கம் எனப்படுகிறது. இதன்மூலம், ஒரே கம்ப்யூட்டரில் பல்வேறு சர்வர்கள் மற்றும் பல்வேறு தரவு மையத்தையும் இயக்கலாம். கம்ப்யூட்டர் ஆற்றலை பல மடங்கு பயன்படுத்துவதோடு, செலவும் பல மடங்கு மிச்சமாகும். முக்கியமாக மின் செலவையும் கணிசமாக சேமிக்கலாம்.

image

இதற்கான மென்பொருளைதான் ரோசன்பிளம் உருவாக்கியிருந்தார். இந்த மென்பொருள் வடிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் காண்பித்தபோது இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியது. ஆனால், இதுதொடர்பான சந்திப்பு நடந்த பிறகும், செயலில் எதுவும் நிகழவில்லை.

இந்த நிலையில்தான் ரோசன்பிளம் தாங்களே இந்த மென்பொருளை வர்த்தக நோக்கில் கொண்டுவரலாம் என நினைத்தார். மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனம் ஆர்வம் காட்டியதால் இதன் வர்த்தக தன்மையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான், இந்தத் திட்டத்தில் உதவுமாறு மனைவியுடம் கேட்டுக்கொண்டார்.

கிரீனும் தொழில்நுட்ப பின்புலம் கொண்டவர் என்பதால், மெய்நிகராக்க மென்பொருளின் முக்கியத்துவத்தையும், எதிர்கால தேவையும் நன்றாக புரிந்துகொண்டு செயலில் இறக்கினார். இதன் பயனாக பிறந்ததுதான் விஎம்வேர் (மெய்நிகராக்க மென்பொருள் எனும் ஆங்கில பதத்தின் சுருக்கம்) நிறுவனம்.

1998-ம் ஆண்டு நிறுவனம் துவங்கியது. கிரீன் தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து விலகி ஊதியம் இல்லாத முதல் ஊழியராக இணைந்தார். அவரே சி.இ.ஓ-வாகவும் செயல்பட்டார். ரோசன்பிளம் பல்கலை.யில் இருந்து இரண்டு ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டார்.

விஎம்வேர் அறிமுகம் செய்த மென்பொருளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது. கம்ப்யூட்டருக்குள் மெய்நிகர் கம்ப்யூட்டரை இயக்க வழி செய்த இந்த மென்பொருளை சிறிய வர்த்தக நிறுவனங்கள் விரும்பி வாங்கின. நிறுவனம் மெள்ள வளர்ந்தது. கிரீன் திறம்பட வழிநடத்தினார்.

எனினும், துவக்க காலத்தில் எதிர்பாராத சவாலும் இருந்தது. 1998-ல் இணைய உலகில் டாட் காம் அலை வீசிக்கொண்டிருந்த காலம் என்பதால், இணைய நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே பல நிறுவனங்கள் தொழில்நுட்ப சிக்கனத்திற்கு வழிவகுத்த விஎம்வேர் மென்பொருள் தேவையை பெரிதாக உணரவில்லை. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் டாட் காம் குமிழ் வெடித்து இணைய நிறுவனங்கள் பல காணாமல் போனபோது, சிக்கனத்திற்கான தேவையும் உணரப்பட்டது.

இதனிடையே, விஎம்வேர் நிறுவனமும் நல்ல வளர்ச்சி கண்டது. அடுத்து வந்த ஆண்டுகளில் மெய்நிகராக்க மென்பொருளுக்கான தேவை பரவலாக உணரப்பட்டது. மெய்நிகராக்க மென்பொருள் சேவையே இணையம் மூலம் கம்ப்யூட்டர் ஆற்றலை அணுக வழி செய்யும் கிளவுட் சேவைக்கான அடிப்படையாக அமைந்தது.

மெய்நிகராக்கம் என்பது கம்ப்யூட்டருக்குள் மெய்நிகர் கம்ப்யூட்டர்களை உருவாக்க வழி செய்தது என்றால், இணையம் மூலம் எங்கோ உள்ள மெய்நிகராக்க மென்பொருளை அணுக முடிந்தது கிளவுட் சேவையாக உருவானது. இது மெயின்பிரேம் கம்ப்யூட்டர் காலத்து கருத்தாக்கம் என்றாலும், விஎம்வேர் இந்த கருத்தாக்கம் பிரபலமாவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

image

1998-ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை கிரீன் விஎம்வேர் நிறுவன சி.இ.ஓவாக இருந்தார். இடையே நிறுவனத்தை பங்குச்சந்தைக்கும் கொண்டு வந்திருந்தார். அதற்கு முந்தைய ஆண்டுதான் 'ஃபார்டியூன்' இதழ் அவரை அமெரிக்காவின் 50 செல்வாக்கு மிக்க வர்த்தக துறை பெண்மணிகளில் ஒருவராக பட்டியலிட்டிருந்தது.

ஆனால், விஎம்வேர் மெய்நிகராக்கத்தில் கவனம் செலுத்தியதே தவிர, கிளவுட் சேவையில் கவனம் செலுத்தவில்லை. இதனால், கிளவுட் எழுச்சியை நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள தவறியது. நிறுவன இயக்குநர் குழுவுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் கிரீனும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே கிரீன் 'பீபாப்' (BeBop) எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியிருந்தார். இந்த நிறுவனத்தை கூகுள் கையகப்படுத்திய நிலையில், 2012-ல் அவர் கூகுள் நிறுவன இயக்குநர் குழுவில் இணைந்தார். 2015-ல் கூகுள் கிளவுட் சேவைக்கு பொறுப்பேற்றுக்கொண்டார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூகுள் கிளவுட் சேவையில் நிர்வாக முகமாக செயல்பட்டவர், 2019-ல் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

ஆனால், ஒரு தலை சிறந்த நிர்வாகியாக அவரது ஆற்றலை தொழில்நுட்ப உலகம் நன்கு உணர்ந்திருக்கிறது. இதன் பயனாக பல நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் அவர் அங்கம் வகிக்கிறார். எம்.ஐ.டி பல்கலை. இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிப்பவர், அறுபது வயதை கடந்த நிலையிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். சிலிக்கான் வேலியில் இளம் பெண்களும், தொழில்முனைவு கனவு கொண்டவர்களும் தங்களுக்கான ஊக்கமாக கொள்ளும் முன்னோடியாக இருக்கிறார்.

முந்தைய அத்தியாயம்: ஸ்டார்ட் அப் இளவரசிகள் 4: டோனா டபின்ஸ்கி - கையடக்க கம்ப்யூட்டர் நாயகி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்