Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கண்ணீர் கடலில் ரசிகர்கள்; ஸ்தம்பித்த கண்டீரவா மைதானம் - புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னட உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் மகனான புனித் ராஜ்குமார், ஏராளமான கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

Image

கன்னட திரையுலகில் அதிகபட்ச ஊதியம் பெறும் நடிகராக வலம் வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமாரின் உயிர் பிரிந்தது. ரசிகர்களால் 'அப்பு' என அன்போடு அழைக்கப்படும் புனித் ராஜ்குமார், 1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். 1 வயது முதல் 13 வயது வரை கன்னட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர், "பெட்டாடா ஹூவு" திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.

image

2002 ஆம் ஆண்டு அப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான புனித் ராஜ்குமார், 29 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜேம்ஸ், வித்வா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டவர். அவரது இறப்புக்கு கன்னட திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்நிலையில் அவரது உடல் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கண்டீரவா மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. கண்ணீருடன், துக்கம் தாளாமல் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

image

மேலும் அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெங்களூரு முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விருப்பப்பட்ட பள்ளிகள் மூடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை பெங்களூருவில் மதுபான கடைகள் மூடப்படுகிறது. புனித் ராஜ்குமாரின் மகள் அமெரிக்காவில் இருந்து வந்ததும் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்