Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ஆதாரமில்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது” : முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இதிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரப் பிரதேச மாநில போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா என உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
 
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ''லக்கிம்பூர் கெரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கை மிகவும் உன்னிப்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் எபோதும் வன்முறைக்கு இடமில்லை. அனைவரையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இருக்கும்போது, அதை யாரும் கையில் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
 
விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் வீடியோ ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான வீடியோக்களில் காருக்குள் யார் இருந்தது என்பது தெரியவில்லை. ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. ஆதாரம் இருந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்