மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளது.
அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்' என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளரின் இந்தக் கடிதம் குறித்து பேசியுள்ள பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் முதல்வரிடமிருந்து நிர்வாகம் தொடர்பாக எது வேண்டுமானாலும் கேட்கலாம். இது அரசியல் நிர்ணய சபையில் கொண்டுவரப்படும்போது, ஆபத்தானது என்று கூறி பல எதிர்ப்பு கிளம்பியது. அம்பேத்கர் தான் இதை சாமதானப்படுத்தி இருக்கட்டும் என்றார்.
ஆனால், ஆளுநர் நேரடியாக துறை செயலாளர்களிடம் கேட்பதோ, அல்லது துறை செயலாளர்கள் ஆளுநருக்கு பவர் பாயிண்ட் தயார் செய்வதோ ஆபத்தானது. சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இது போன்ற சர்ச்சை கிளம்பியது.
ஜெயலலிதா அப்போது தமிழகத்தின் முதல்வர். இது போன்ற விஷயத்தில் சென்னா ரெட்டி ஈடுபட்டபோது, ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்பை பார்த்து சென்னா ரெட்டி கைவிட்டார். கடந்த காலத்திலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக எதிர்த்தது. ஆனால், இறையன்பு இப்படியொரு சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒருவேளை ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என திமுக நினைத்துவிட்டதாக நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''சென்னா ரெட்டியாக இருந்தாலும் சரி, பன்வாரிலால் புரோகித் ஆக இருந்தாலும் சரி, ஆய்வு என்ற பெயரில் செயல்பட்டனர். ஆனால், தற்போதிருக்கும் ஆளுநர் அறிக்கை தான் கேட்கிறார். ஆளுநருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதில் ஒரு கேள்வி கேட்டால் அது ஆய்வாக இருக்காது என தோன்றுகிறது. தலைமை செயலகம் சென்று துறை ரீதியாக அறிக்கை கேட்டால் அது தேவையில்லாதது. சமர்பிக்கப்பட்ட அறிக்கையை வைத்து, 'ஏன் இதை செய்யவில்லை? திட்டம் ஏன் தாமதம்? என்று கேட்டால் அது ஆய்வாக மாறும். அது ஆளுநருக்கு உட்பட்ட அதிகாரம் கிடையாது. பாஜக ஆட்சி அமைத்த பிறகு ஒவ்வொரு ஆளுநரும் சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்