Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“நீதிமன்றத்தில் சரணடைந்தது ஏன்”- கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் விளக்கம்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததற்கான விளக்கத்தை கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் மேம்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி டிஆர்வி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் உயிரிழந்தார். இவ்வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவாரா அல்லது சிபிசிஐடி அவரை கைது செய்யுமா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இன்று காலை டிஆர்வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தொடர்புடைய செய்தி: கொலை வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் எம்.பி ரமேஷ் சரண்

image

தான் சரண் அடைந்தது தொடர்பாக அவர் தற்போது கடிதமொன்றை அளித்துள்ளார். அந்த கடிதம் வழியாக அவர் கூறும் விளக்கம்: “என்னுடைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவர் மரணம் தொடர்பாக சிபிசிஐடி என்மீது பதிவுசெய்துள்ள முதல் தகவலறிக்கையின் அடிப்படையில், திமுக மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு தவறான பிரசாரம் மேற்கொண்டிருப்பது என் மனதுக்கு நெருடலாக உள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு தொண்டனாக இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கும் நல்லாட்சி மீது இப்படி வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி இவ்வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி வந்தவுடன் இந்த வழக்கு தொடங்கும். இவரை விசாரிக்க சிபிசிஐடி அவகாசம் கேட்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த அனுமதியை நீதிபதி தருவாரா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரலாம்.

image

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தரப்பில்  “கோவிந்தராஜின் முந்தைய நாள் செயல்பாடுகள், அவர் சென்ற இடங்கள், பயணித்த கார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள், எம்.பி.ரமேஷின் உதவியாளர் நடராஜ் உள்ளிட்டோர் தந்த வாக்குமூலம், ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம், பிரேத பரிசோதனையில் கிடைக்கப்பட்ட தகவல்கள்’ உள்ளிட்ட்டவை ஆவணங்களாகவும் ஆதாரங்களாகவும் திரட்டப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே சந்தேக வழக்காக இருந்த இது, கொலை வழக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளது” என சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்