கூடலூரில் 4 பேரை அடித்துக் கொன்றிருக்கும் புலி, எந்த காரணத்தைக் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது என்று தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்திருக்கிறார்.
நான்கு பேரை அடித்துக் கொன்றுள்ள புலி இரண்டாவது நாளாக தன்னை வெளிப்படுத்தாமல் பதுங்கி இருக்கிறது. இதனால் புலியை பிடிப்பதில் வனத் துறையினருக்கு சவால் ஏற்பட்டுள்ளது. நான்காவது நபரை அடித்துக் கொலைசெய்த மசினக்குடி பகுதியில் புலி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், அவ்விடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் காவல் துறையினர் என நூற்றக்கும் மேற்பட்டவர்கள் குழுக்களாக பிரிந்து புலியை பிடிக்கும் முயற்சியிpல் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து புலியின் நடமாட்ட பகுதியை கண்டறிவதில் சவால் ஏற்பட்டுள்ளதால் அதன் கால்தடத்தை மோப்பம் பிடித்து கண்டறியும் முயற்சியில் சிப்பிப்பாறை வகை நாட்டுநாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ராணா என்ற மோப்பநாயும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டால், யானைகள் மீது அமர்ந்து புலிக்கு மயக்க ஊசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மசினகுடியில் புலிதாக்கி உயிரிழந்தவரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். அதன்பின்னர் புலியை தேடும் வனத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புலியை மயக்க ஊசி செலுத்திப்பிடிக்க மட்டுமே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்