அர்ஷ்தீப் தனது குறிப்பிடத்தக்க பந்துவீச்சால் இந்திய அணிக்கு பயனளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதாகவும், பிசிசிஐ அவரது திறனை வளர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார் சேவாக்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 5 விக்கெட்களை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் தனிக்கவனம் பெற்றார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த 3வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் 22 வயது ஆகும் அர்ஷ்தீப் சிங்.
இதுகுறித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், அர்ஷ்தீப் தனது குறிப்பிடத்தக்க பந்துவீச்சால் இந்திய அணிக்கு பயனளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதாகவும், பிசிசிஐ அவரது திறனை வளர்க்க உதவுமாறும் வலியுறுத்தினார். சேவாக் கூறுகையில், ''அர்ஷ்தீப், ஜாகீர் கானுடன் மூன்று நாட்கள் பணியாற்றியதாக கூறினார். அவர் மூன்று நாட்களுக்குள் பந்தை ஸ்விங் செய்ய முடிந்தால், கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய வீரர் அணியில் இல்லை என்றால், பிசிசிஐ அர்ஷ்தீப்பை கவனித்து அவரது திறமை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அர்ஷ்தீப் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து, இதுபோன்று செயல்பட்டால், அவர் நிச்சயம் ஒருநாள் இந்திய அணிக்கு வருவார்" என்று சேவாக் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்