பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தனிக்கட்சி தொடங்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார். இந்த குழப்பமான சூழலில் பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அமரீந்தர் சிங், ‘‘நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ எனக் கூறினார்.
பஞ்சாப் அரசியல் களத்தின் முக்கிய தலைவராக விளங்கும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அவர் இரு வாரங்களுக்குள் வெளியிடுவார் எனவும், பல பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமரீந்தர் சிங், சில விவசாய சங்கத் தலைவர்களையும் தனது கட்சியில் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனிக்கட்சி தொடங்கியப்பின், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிடுவது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் தனது அடுத்த டெல்லி பயணத்தின்போது கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களை சந்திகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமரிந்தர் சிங் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியில் நான் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டேன். இதுபோன்ற அவமானங்களை நான் ஏற்க மாட்டேன். இதற்கு மேலும் காங்கிரசில் இருக்க எனது கொள்கை என்னை அனுமதிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தின் நலனை கருதி எனது எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறேன். ஏனெனில் மாநிலத்தின் வளர்ச்சி, பாதுகாப்புதான் எனக்கு முக்கியம் ஆகும். காங்கிரசின் எதிர்காலத்துக்கு நல்ல சிந்தனையாளர்களாகிய மூத்த தலைவர்கள் மிகவும் முக்கியம். அவர்கள் வகுக்கும் திட்டங்களை செயல்படுத்த இளம் தலைமையை கட்சித் தலைமை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கட்சியில் மூத்த தலைவர்கள் அனைவரும் முற்றிலும் ஓரங்கட்டப்படுகின்றனர். இது கட்சிக்கு நல்லதல்ல'' என்று தெரிவித்தார்.
பஞ்சாப்பில் காங்கிரஸின் முகமாக இருந்து வந்த அமரிந்தர் சிங், கட்சியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவு என்றும் அமரிந்தர் சிங் விலகலின் பலனை பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் அறுவடை செய்யும் எனவும் அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்