நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் விளம்பரதாரராக காங்கிரஸ் கட்சி செயல்படுவதால்தான் அவர்கள் "மிகவும் சக்திவாய்ந்தவர்களாக" உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அம்மாநிலத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸால் மோடி இன்னும் பலமாகப் போகிறார். ஏனென்றால் பாஜகவின் விளம்பரதாரராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. காங்கிரஸால் தற்போதும் சரியாக முடிவெடுக்க முடியாவிட்டால் நாடு பாதிக்கப்படும். ஏன் நாடு பாதிக்கப்படவேண்டும், அவர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று திரிணாமுல் தலைவர் கூறினார்.
இதன்மூலமாக மம்தா அடுத்த ஆண்டு கோவாவில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவில்லை என தெரிகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை காங்கிரஸ் அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மம்தா பானர்ஜி, பாஜகவை எதிர்கொள்ளவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் பிராந்தியக் கட்சிகளின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் உணரவில்லை என்றும் தெரிவித்து வருகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, முன்னர் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த விஜய் சர்தேசாயின் கோவா பார்வர்ட் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒரு கூட்டத்தில் மம்தா பேசுகையில் “பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் என்னை எதிர்த்துப் போட்டியிட்டது. அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிடும்போது, நாங்கள் அவர்களுக்கு பூக்களையா கொடுப்போம்?" என்று கூறினார்.
தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக மற்றும் மோடியை வீழ்த்தும் வியூகம் இல்லை என தெரிவித்திருந்த நிலையில், மம்தா பானர்ஜியின் வார்த்தைகள் அதனை ஆமோதிக்கும் வகையில் உள்ளது.
இதனைப்படிக்க...அரசியல் ரீதியான சந்திப்புகளை தொடரும் மம்தா - எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்