குஜராத்தில் பிறந்து, குவலயம் போற்றும் வகையில் தாய்நாட்டின் விடுதலைக்கு சத்தியத்தின் வழியில் புதுப்பாதை வகுத்துத் தந்த தேசத்தந்தை மகாத்மாவின் பிறந்த நாள் இன்று. தந்நலம் கருதாது பிறர்நலம் காத்த அந்நாயகனை எந்நாளும் போற்றுவோம்.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது.
நாமக்கல் கவிஞர் எழுதிய புகழ் பெற்ற இவ்வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாம் காந்தியின் உன்னதம். ஆயுதங்கள் பல ஏந்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட அண்ணல் காட்டிய வழி சத்தியம். உண்ணாமல் இருந்து உணர்வுகளை புரிய வைத்த உத்தமர் அவர். மனித சமுதாயம் அதுவரை கண்டிராத வழியின் மூலம் தாயகம் உய்வுற வழி செய்த மகாத்மா, தென் ஆப்ரிக்காவிலும் நிறவெறி ஒழிய காரணமானார்.
உலகம் அதுவரை கண்ட தலைவர்களில் தான் கொண்ட பண்பினால் தனித்து நின்று நிகரில்லா தலைவனானார். அமைதி வழியில் நமது கோரிக்கையின் வலிமையை அந்நிய அரசிற்கு எடுத்துரைப்பதே அவர் இட்டுத் தந்த பாதை. இந்தியக் குடியானவனின் உடையில் கனவான்களின் அவையில் பேசிய கண்ணியமிக்கவர் காந்தி. ஒரு போதும் அவர் வன்முறையை ஆதரித்தது இல்லை.
விசாரணையின்றி இந்தியர்களை கைது செய்ய வழி வகுத்த ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தி அறிவித்தது ஒத்துழையாமை இயக்கம். அந்நியர்களின் பொருள்களை புறக்கணித்தனர் இந்தியர்கள், அந்நிய அரசு வழங்கிய கெளரவப் பட்டங்களை பலரும் துறந்தனர். வெள்ளை அரசு திகைத்து நிற்கும் சமயத்தில் இந்தப் போராட்டத்தை காந்தியே நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது. காரணம் செளரி செளரா கலவரம். வெள்ளை அரசால் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஆத்திரம் கொண்ட இந்திய இளைஞர்கள் செளரி செளரா காவல்நிலையத்தை தீக்கிரையாக்கியதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர்.
இது தன் கொள்கைக்கு எதிரானது எனக் கூறி மிகவும் வேதனையடைந்த காந்தி போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். வன்முறை இல்லாப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு வழிநடக்கும் பக்குவம் இந்திய மக்களிடத்தில் இன்னும் ஏற்படவில்லை என்பதை கடவுள் தனக்கு உணர்த்தியுள்ளதாகக் கூறிய மகாத்மா, வன்முறை நிகழ்வு தான் அறிவித்த போராட்டத்தில் ஏற்பட்டதால் தானே முதல் குற்றவாளி எனவும் அறிவித்து ஐந்து நாள்கள் உண்ணா நிலை கொண்டார். பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலும் உழன்றார்.
சத்தியத்தின் வழி நின்று பரந்து நின்ற பாரதத்தின் விடுதலைக்கு பாடுபட்ட பாபு, இந்தியா விடுதலை பெற்ற அன்று தலைநகரில் இல்லை. பிரிவினையை முன்வைத்து நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள் மகாத்மாவை பாதித்தது. அதுவும் நவகாளியில் நடைபெற்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அதை ஒட்டிய கிராமங்களில் அவர் மேற்கொண்ட நடைபயணம் வரலாற்றில் மகத்தான இடத்தைப் பெற்றுள்ளது. காரணம் நாடு விடுதலை பெற்று களித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டு மனம் மகிழ வேண்டிய மகாத்மாவோ தான் கொண்ட கொள்கையினை காப்பாற்றும் பொருட்டு வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நடந்து கொண்டிருந்தார். பல நாள்களுக்குப் பின் அங்கு அமைதி திரும்பிய பின்னரே தலைநகரம் திரும்பினார்.
உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போராட்டங்களிலும் வெற்றி கிட்டிய பின்னர், விடுதலை பெற்ற நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர்களே. இந்திய விடுதலைக்கு வித்திட்ட காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, விடுதலை பெறும் நாளில் கூட தம் மக்கள் வன்முறையைத் தவிர்த்து அன்பின் வழி வாழ வேண்டும் என்பதை உணர்த்த நடந்து கொண்டிருந்தார். அதனால்தான் வரலாறு நமக்கு காட்டிய தலைவர்களுள் எல்லாம் தன்னிகரில்லா தலைவராக இருக்கிறார் இந்த அகிம்சையின் நாயகன்.
நாட்டின் ஒளியாக திகழ்ந்தவர் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நாதூராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மாமனிதரை கொன்றுவிட்டு மத வெறுப்பை தூண்ட முயன்ற கோட்சேவின் முயற்சிகள் இறுதியில் பலிக்காமல் போனது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்