தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கிட்டதட்ட 19 மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களை இனிப்பு தந்து வரவேற்க ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதுமுள்ள 32,000 பள்ளிகளில் பயிலும் 34 லட்சம் மாணவர்கள் மீண்டும் வகுப்பறைக் கற்றலுக்கு திரும்ப தயாராகியுள்ளனர். கடந்த மாதங்களில் வீடுகளுக்குள்ளாக முடங்கியிருந்ததாலும், ஆன்லைன் கற்றல் காரணமாகவும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பர் என்ற அடிப்படையில் மாணவர்களின் மனதை மகிழ்விக்க கதை, விளையாட்டு, பாடல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவற்றை முன்னெடுக்குமாறு அறிவித்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. மட்டுமன்றி பள்ளிக்கு வரும் மாணவர்களை மாநிலம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் வரவேற்க உள்ளனர்.
தொடர்புடைய செய்தி: 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சுழற்சி முறையில் வகுப்புகள், வகுப்பறையில் ஒரு நேரத்தில் 20 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், தீபாவளிக்கு பிறகே பெரும்பாலான மாணவர்கள் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில், ‘பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. ஆன்லைன் கல்வி தொடரும்’ என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்