Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ. 70 லட்சம் மோசடி: தம்பதியர் கைது

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் சுமார் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் திவ்யா - செந்தில் தம்பதியர். இவர்கள் தங்கள் வீட்டிலேயே மாத ஏலச்சீட்டு, டேபிள் சீட்டு, ஸ்கூல் பண்டு, மாத பண்டு, தீபாவளி பண்டு, கிறிஸ்துமஸ் பண்டு உள்ளிட்ட பெயர்களில் முறையான அனுமதி பெறாமல் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் குடும்பத்தினர் 5 பேர் உள்ளிட்ட பலரும் சேர்ந்து சீட்டு மற்றும் பண்டு பணம் கட்டி வந்துள்ளனர். தாங்கள் கட்டிவந்த சீட்டு முதிர்வடைந்த பிறகும் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

image

இது தொடர்பாக பிரியதர்ஷன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் திவ்யா, செந்தில் தம்பதியர் முறையான அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி லட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்