தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட புதிதாக உருமாறிய கொரோனா என அறியப்படும் ‘ஒமிக்ரான்’ உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள, மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைய வாய்ப்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.
“உருமாறிய புதிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வைரசில் ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிராக நோய் தடுப்பாற்றலை கொடுக்கின்ற பணியை தான் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் செய்து வருகின்றன. ஆனால் அந்த தடுப்பூசியின் செயல்திறனை ஒமிக்ரான் வைரசில் உள்ள அதிக அளவிலான ஸ்பைக் புரதங்கள் குறைக்க வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் இந்த புதிய தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டி உள்ளது. மக்கள் அனைவரும் நோய் தடுப்பு பாதுகாப்பு கவசங்களை தொடர்ந்து அணியுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்