சென்னையில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய, 1,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்னகம் புகார் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ''சென்னையில் பெய்த மழையின் காரணமாக 32 பகுதிகளில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து 23 பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பு சரி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மீதம் இருக்கக்கூடிய 9 இடங்களில் மின்சாரம் வழங்குவதற்கு மழைநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மின்சார விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைய தினம் 4,200 மின் நுகர்வோர்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.
இன்று மொத்தமாக 2,223 புகார்கள் வந்துள்ளன. அதில் 1,283 புகார்கள் மின் இணைப்பு சம்பந்தமான புகார்கள் வந்துள்ளன. புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை மாநகராட்சியில் மின் விநியோக பணிகளை சீர் செய்யும் விதமாக ஆயிரம் களப்பணியாளர்கள் பணியில் களத்தில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்கள் இறப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறப்பு குறித்து விரிவான அறிக்கை வந்த பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள பில்லர் பாக்ஸ்களை ஒரு மீட்டர் அளவு உயர்த்தும் பணிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக அதன் பணிகள் முடிக்கப்படும்.
அடுத்த மழைக்காலம் வருவதற்குள் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பில்லர் பெட்டிகள் அனைத்தும் ஒரு மீட்டர் அளவு உயரம் உயர்த்தப்பட்டு சீரான மின்சாரம் விநியோகம் வழங்கும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையில் தி.நகர், மேற்கு மாம்பலத்தில் தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியம் சார்பில் “சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 32 மின்மாற்றிகளில் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியிருப்பதன் அடிப்படையில் ஒரு மணி நேரத்தில் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும்” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையை திக்குமுக்காட வைத்த திடீர் கனமழை - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்