உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களில் சுனாமி எனும் ஆழிப்பேரலையும் ஒன்று. தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிறது. துயரின் நினைவுகளை திரும்பிப் பார்க்கலாம்!
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நிலைகுலைய வைக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. அதுவரை பெரும்பாலும் கேள்விப்படாத பெயருடன் பேரழிவைத் தந்தது சுனாமி. ஆக்ரோஷமாய் சீரிய கடலில் உருவான ஆழிப்பேரையில் சிக்கிய ஆயிரக்கணக்கானோரின் உடல்கள், குவியல் குவியலாக கடற்கரையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட காட்சி உலகையே உலுக்கிப்போட்டது.
அத்துயர சம்பவம் நடந்து ஆண்டுகள் 17 ஆனாலும், சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தின் பிடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள், சென்னை காசிமேடு பகுதி மக்கள். ஆண்டுகள் உருண்டோடினாலும் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருக்கும் அந்த துயர சம்பவத்தை, அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை. சுனாமி பாதிப்பால் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே இருந்த பல்லவன் நகர், திடீர் நகர், பவர் குப்பம், பூங்காவனம் குப்பம், அண்ணா நகர், சீனிவாச புரம் ஆகிய ஒன்பது மீனவ குடியிருப்புகள் முற்றிலும் அழிந்தன.
அதில் அரசின் நடவடிக்கையால் 2 ஆயிரத்து 508 குடும்பங்களுக்கு மட்டும் சுனாமி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வீடுகளை இழந்த மேலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் குடியிருப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர். குடும்ப உறவுகள், வருமானம் ஈட்டித் தந்த படகுகள். வருடக்கணக்கில் வாழ்ந்த வீடுகள். என அத்தனையும் ஒரே நேரத்தில் இழந்த துயரில் இருந்து மீளமுடியாமல் 17 ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு, அரசு உதவிட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்