இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தினை இயக்குநர் பாக்யராஜ் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ கடந்த 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.
இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜ் ‘ரைட்டர்’ படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”’ரைட்டர்’பார்த்தேன். மீண்டும் நாம் முதன்மையான இடத்தை தக்கவைக்கக்கூடிய நம்பிக்கை கிடைக்கிறது. ஒரு காவலரின் உண்மையான வாழ்க்கையில் நுழைந்துப் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. யாருமே வேஷம் போட்டு நடித்தார்கள் என்பதே தெரியவில்லை. உயிரோட்டமாக வாழ்ந்துள்ளார்கள்.
இப்படத்தில் பிரமாதமாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ஹீரோவா? முதல் படம் மாதிரியே தெரியாமல் அனுபவத்தோடு ஆராய்ச்சி பண்ணி படத்தை எடுத்திருக்காரே ஃப்ராங்ளின் ஜேக்கப்பா ஹீரோவா? இல்ல... இந்தப் படத்தை தயாரித்த இயக்குநர் பா. ரஞ்சித் ஹீரோவா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தான் பெரிய ஹீரோ. நீங்கள் படம் பாருங்கள் நான் சொன்னது சரியாக இருக்கும்.
மொத்தப் படக்குழுவிற்கும் வணக்கங்கள். எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டு சான்சே இல்லை என்றார்கள். விமர்சனங்களைப் பார்த்துவிட்டுத்தான் நானும் ’ரைட்டர்’ பார்த்தேன். எல்லாருக்குமே ‘சான்சே இல்ல அனுபவம் கிடைக்கும்’. அவசியம் பாருங்கள்” என்று பாராட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்