Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வேலூர்: ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் 23 ரயில் சேவைகள் ரத்து

வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பாதை வழியாக இயக்கப்பட்ட 23 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கடந்த மாதம் ஆந்திராவில் பெய்த கனமழையினாலும் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 60 ஆயிரம் கனஅடி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொன்னை ஆறு பாலாற்றில் சென்று கலக்கும் வழித்தடத்தின் குறுக்கே உள்ள திருவலம்- முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் பொன்னை ஆற்றுப்பாலத்தின் கீழ் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

image

இந்த விரிசல், நேற்று மதியம் ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வே அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்று பாலத்தில் ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் சென்னையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20-க்கு புறப்பட்டு வேலூர் கண்டோமென்மெட் செல்லும் பயணிகள் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று சென்னை சென்ட்ரல் -கோவை இடையே சதாப்தி விரைவு ரயில் சேவை; சென்னை சென்ட்ரல் - பெங்களூரு சதாப்தி விரைவு ரயில் சேவை; சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் சேவை ஆகியவை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் சென்னை சென்ட்ரல் - மங்களூரு அதிவிரைவு ரயில், வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்; சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையேயான அதி விரைவு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

image

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயில்வே பாலம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சீரமைப்பு பணிக்காக பல ரயில்கள் அங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். முன் அறிவிப்பின்றி திடீரென ரயி்கள் ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாலையிலிருந்தே பணி முடித்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். தற்போது மாவட்டங்களுக்கிடையே பயணிப்போருக்கும் இடராக இது மாறியுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திரும்பத் தரப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்தி: எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் அமமுகவுக்கு அனுமதி மறுப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்