Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் - மலையாள சினிமாவின் பிரம்மாண்டம் சாதித்ததா? சறுக்கியதா?

மோகன்லால், அர்ஜூன், பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் என பெரிய நடிகர் பட்டாளத்தோடு களம் கண்டிருக்கும் சினிமா மரைக்காயர் (அரபிக் கடலின் சிங்கம்). 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது என சொல்லப்படுகிறது. இவரே இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்றும் கூறப்படுகிறது.

முன்னணி இயக்குநரான பிரியதர்ஷன் இயக்கி நேற்று வெளியாகியிருக்கும் இந்த சினிமா 100 கோடி ரூபாய் பொருட் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றன தகவல்கள். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பெரிய செட் அமைக்கப்பட்டு இந்த சினிமா உருவாக்கப்பட்டது. குஞ்சாலி மரைக்காயர் போர்ச்சுகீசியர்களுக்கும் உள்ளூர் ராஜாக்களாக வாழும் அவர்களது சில அடிவருடிகளுக்கும் சிம்ம சொப்பனமாக உருவாகிறார். திருமணத்திற்காகச் சென்ற அவரது குடும்பத்திற்கு நிகழ்ந்த துயர சம்பவம் அவரை ஒரு வலிமையான போராளியாக உருவாக்குகிறது. பிறகு குஞ்சாலி தன் எதிரிகளை எப்படி பந்தாடினார். அவர் சந்தித்த துரோகங்கள் என்ன என வாள்முனை சாட்சியாக நகர்கிறது திரைக்கதை. குஞ்சாலி மரைக்காயரின் இளம் வயது கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணாவ் நடித்திருக்கிறார்.

மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் - BBC News தமிழ்

படத்தின் முதல் பாதியில் ரசிகர்கள் சோர்வடைவதை தவிர்க்க முடியவில்லை. அழுத்தமான வசனங்கள் இல்லை. ஒரு மாவீரனுக்கான நியாயமான அறிமுகக்காட்சி இல்லை. ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே கோர்வை இல்லை என பல சிக்கல்களோடு போகிறது முதல் பாதி. இரண்டாம் பாதியில் யுத்த காட்சிகளை நோக்கி நகரும் இந்த சினிமா கொஞ்சம் இருக்கையில் நம்மை நிமிர்ந்து அமரச் செய்கிறது. மோகன்லாலின் கதாபாத்திரம் இன்னுமே வலுவுடன் எழுதப்பட்டிருக்கலாம். பல முன்னனி நடிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அனைவருக்கும் முக்கிய காட்சிகளை பகிர்ந்து கொடுப்பதில் சிக்கல் இருந்ததை உணர முடிகிறது. அசோக் செல்வன் இதுவரை செய்த கதாபாத்திரங்களில் இது முற்றிலும் மாறுபட்டது. கீர்த்தி சுரேஷுக்கு வெளிநாட்டு நபருக்கும் இடையில் இருக்கும் காதல் அலைவரிசை இதம்.

யுத்த காட்சிகளை படமாக்கிய விதம் நன்றாக உள்ளது. பெரிய திரையில் பிரம்மாண்டத்தை நிச்சயம் ரசிக்கலாம். சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த சினிமா தேசியவிருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாபு சிரிலின் கலை வேலைப்பாடுகள் மற்றும் பெரிய மெனக்கெடலுக்கு பாராட்டுகள். திருவின் ஒளிப்பதிவு இக்கதைக்கு சரியான தேர்வு.

தொழிநுட்பம் மற்றும் பிரம்மாண்டத்தில் செலுத்திய உழைப்பை கொஞ்சம் திரைக்கதை அமைப்பிலும் செலுத்தி இருந்தால் இன்னுமே சுவாரஸ்யமான சினிமாவாக மரைக்காயர் வந்திருப்பார். கடின உழைப்பைக் கொட்டியிருக்கும் மரைக்காயர் படக்குழுவின் இப்பெரிய முயற்சிக்கு பாராட்டுகள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்