Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

களத்தில் புரொஃபசர், நெருக்கும் அதிகார தரப்பு...- நிறைவு தந்ததா 'மணி ஹெஸ்ட்' இறுதிப் பாகம்?

'நமக்கு ஏற்படுற தோல்வி நம்மல யாருன்னு காட்டும். நம்ம கேரக்டர டிஃபைன் பண்ணும். அதுல சிலர் உடைஞ்சு போயிடுறாங்க. சிலர் எதிர்த்து போராடுறாங்க...' என்கிறார் பெர்லின். 'மணி ஹெய்ஸ்ட்' 5-ம் பாகத்தின் கடைசி 5 எபிசோடுகளும் அதையேத்தான் சொல்கின்றன. 'எல்லாமே முடிந்துவிட்டது; இனி வாய்ப்பேயில்லை' என்ற சூழலில் துளிர்க்கும் சிறு நம்பிக்கையை பற்றிக்கொண்டு, போராடி போராடி மேலெழும் ஒரு திருட்டு கும்பலின் இறுதி அத்தியாயம்தான் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

image

டோக்கியோவின் இழப்பிலிருந்து மீள முடியாத புரொஃபசர் தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள சில பல நிமிடங்கள் ஆகிறது. அவரின் அந்த கதறல் சத்தம் நமக்கும் டோக்கியோவின் இழப்பை நினைவுபடுத்துகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு புரோஃபசரை அலேக்காக தூக்கிக்கொண்டு அபேஸ் ஆகிறார் அலிசியா. மற்றொருபுறம் பேங்க் ஆஃப் ஸ்பெயினில் இருக்கும் தங்கத்தை வெளியேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் பலேரமோ தலைமையிலான குழு. எப்படியாவது தங்கத்தை மீட்டு, ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போராடும் கர்னல் டொமாயோ தலைமையிலான குழு. முக்கோண பரமபத ஆட்டத்தில் புரொஃபசரின் ப்ளான்கள் வெற்றியடைந்ததா என்பதுதான் மணி ஹெய்ஸ்ட்டின் இறுதி அத்தியாயங்கள்.

எல்லாம் ஓகே என்றாலும், டோக்கியோவின் இழப்புக்கு இணையாக நிற்கிறது ஆர்த்ரோவின் 'இல்லாமை'. 'வின்னர்' படத்தில், 'எந்த நேரமா இருந்தாலும் வந்துருவான் எங்க போனான் தெரியலை' என அந்தப் பாட்டி சொல்வது போல, ஆர்த்ரோ எப்போதும் கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும் ஜீவன். அவரின் இன்மைக்கு மணி ஹெய்ஸ்ட் குழுவினர் என்ன பிராய்ச்சித்தம் தேடப்போகிறார்களோ? வி மிஸ் யூ ஆர்த்ரோ!

image

உண்மையில் புரொஃபசர் வெறிகொள்ளும் நேரங்களில் கூடவே நமக்கும் வெறி பிடிக்கிறது, முந்தைய பாகங்களில் நாற்காலியை சுழற்றிக்கொண்டு செஸ் விளையாடும் புரொஃபசர் களத்துக்கே சென்று இறங்கி அடிப்பது விறுவிறுப்பை கூட்டுகிறது. அதேபோல பெர்லினின் ப்ளாஷ் பேக் காட்சிகள்... அவருக்கும் அவரது மகனுககுமான உரையாடல்கள் ஈர்க்கின்றன. வாழ்க்கை கொடுக்கும் திருப்பங்களை பெர்லினைப்போல எதிர்கொள்ள முடியுமா? தெரியவில்லை. லாவகமாக கையாள்கிறார். மகனிடம் 'நானே இருந்தாலும் அதைத்தான் பண்ணிருப்பேன்' என உச்சபட்ச மெச்சூரிட்டியுடன் பேசிவிட்டு நகர்ந்து செல்வது அட்டகாசம்.

காயங்கள் காய்ந்தாலும் தழும்புகள் மனவலியை உணர்த்துவதைப்போல, அதன்பின்னான காட்சிகளில் உடைந்து போகிறார் பெர்லின். ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் 67-க்கும் அதிகமான ஹெய்ஸ்ட்டில் ஈடுபட்டு சிக்காதவர், பெண்ணின் துரோகத்தால் உடைந்து உடைத்ததால் சிறைவாசம் அனுபவிக்கிறார். அப்படிப் பார்த்தால் பெர்லினுக்கான உருவாக்கப்படும் அடுத்த தனி சீரிஸ் நியாயமானது என்றே தோன்றுகிறது.

image

கடந்த எபிசோடுகளைப்போலத்தான் பிரதான கதாபாத்திரத்துக்குள் இருக்கும் கதைகளை லேயர் லேயராக பிரித்து விறுவிறுப்புகளுக்கு நடுவில் ஓடச் செய்கிறார்கள். அந்தக் கதைகள் யாவும் அழகாகவே இருக்கின்றன. குறிப்பாக, புரொஃபசரின் தந்தையின் இழப்பு குறித்து அவர் விவரிக்கும் காட்சி அடர்த்தியாகவும் அதற்கே உண்டான வலியை கூட்டுகிறது. புரொஃபசர், பெர்லின், அவரது மகன் அமர்ந்து பேசும் ப்ளாஷ்பேக் காட்சிகள் க்ளாஸிக்!

இரண்டு ரிலேஷன்சிப்களில் சிக்கித் தவிக்கும் டென்வரின் மனக்குழப்ப போராட்டம், டோக்கியோவையே தேடும் ரியோவின் கண்கள், 'என்னை யாரும் இதுவர காதலிச்சதில்லை' என்ற ஹெல்சங்கியின் வெறுமை, முதல் முதலாக அழும் அலிசியாவின் அழுகையின் ஈரம், லிஸ்பென்னுக்கும் புரொஃபசருக்குமான காதல் காட்சிகள், மோனிகாவின் மனப்பிறழ்வுகள் என ரசிக்கும் பேக்கேஜாக வந்திருப்பது சிறப்பு.

குழுவை தலைமை தாங்கி நிற்கும் பலேரமோ, 'எதிர்த்தரப்பிடம் பேசும்போது எந்த சைடா இருந்தாலும் வலி ஒண்ணுதான்' என்கிறார். அவரதுக்கு இருதரப்பு இழப்பின் வலியும் புரிகிறது. சொல்லப்போனால் 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் பலமும் கூட அதுதான். யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்ற புரொஃபசர் தலைமையிலான குழுவையும், பொய்யை ஜோடித்து, பித்தலாட்டங்களை அரங்கேற்றி குற்றவாளிகளை கொன்றாவது ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற அதிகார வர்க்கத்தின் வெறியையும் பிரித்து காட்டுவதால்தான் திருடுபவர்கள் ஹீரோககளாக எஞ்சி நிற்கிறார்கள். 'என் டீமை நான் என்னைக்குமே விட்டுகொடுத்ததில்ல' என்ற புரொஃபசரின் நேர்மை கவனிக்க வைக்கிறது.

image

கடந்த முறை வெளியான எபிசோடுகளில் ரத்தமு, தோட்டக்களின் சத்தமும் தெறித்துத் துருத்திக்கொண்டு தெரிந்தது. கதையின் அடர்த்தியை சிதைத்த அந்த தவறுகளை இம்முறை தவிர்த்திருப்பது பாராட்டத்தக்கது. அரசு அதிகாரம் புரொஃபசரின் பிளான்களை அடியொற்றி நடப்பதையும், இறுதி முடிவும் சிறிய நெருடலை கொடுக்கிறது. ஃபிக்‌ஷன் என்ற தளத்தில் பார்க்கும்போது அவை பெரிய அளவில் தொந்தரவு செய்யவில்லை. தங்கத்தை உருக்கி வெளியில் எடுக்க போடப்படும் ப்ளான், அதை எழுதியிருக்கும் விதம் மலைக்க வைக்கிறது.

கதவுகளை உடைத்துக்கொண்டு ராணுவம் உள்ளே நுழையும் விஷுவல்ஸ் மற்றும் பின்னணி இசை கண்சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தொடர் முழுவதையும் கவனித்தால் படக்குழுவின் உழைப்பு அபரிவிதமானது. கதாபாத்திர வடிவமைப்பு தொடங்கி, திருட்டின் புது புது ஐடியாக்கள், ட்விஸ்ட்கள், உணர்வுகளை சுண்டியிழுப்பது என எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் பங்கு நிச்சயம் பாராட்டத்தக்கது.

image

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு - அதிகார தரப்புகளால் அனாயசமாக கையாளப்படும் சாதாரண மனிதர்களுக்குத் தற்காலத்தின் தேவை 'எதிர்ப்புணர்வு' என்பதை அழுத்தமாகப் பேசிய 'மணி ஹெய்ஸ்ட்' அரசியலும் கச்சிதமாக நிறைவுடன் நிறுவப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போது வெளியாகியிருக்கும் இறுதி அத்தியாயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நிறைவைத் தரும் என நம்பலாம்.

இதனைப்படிக்க...சென்னை: ஃபேஸ்புக் மூலம் பழகி ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்