காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி “தனிப்பட்ட பயணமாக” இத்தாலி சென்றுள்ளார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று இத்தாலி சென்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக ஜனவரி 3-ஆம் தேதி மோகா மாவட்டத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றவிருந்தார். ஆனால், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, அவர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து, கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே திரும்பினார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து பாஜக, திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ராகுல் காந்தி ஒரு சிறிய தனிப்பட்ட பயணத்தில் இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியும் அதன் ஊடக நண்பர்களும் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பேரணி நடத்துவார் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்