தமிழ்நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டை மக்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் இறைவழிபாடு மேற்கொண்டனர்.
ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். புத்தாடைகள் அணிந்து புத்தாண்டை வரவேற்ற மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குடியிருப்பில் இருந்த சிறுவர்கள், சிறுமிகள் ஆடல், பாடலுடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பைக் ரேஸ்களை தடுப்பதற்காக அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 13ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் காவல்துறையினர் சோதனையிட்டனர். சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனத்தை இயக்கியோர் மீது நடவடிக்கை எடுத்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் காவல்துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதையும் படிக்க: பிறந்தது புத்தாண்டு - புதுச்சேரியில் உற்சாக கொண்டாட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்