புதுச்சேரி முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கிடையே புத்தாண்டை பொதுமக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒமைக்ரான் காரணமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியில் அரசு அனுமதி வழங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுக்கத் தொடங்கினர். விடுதிகள், உணவகங்கள் நிரம்பி வழிந்தன. அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களே இந்நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி கடற்கரையில் கூடிய மக்கள், ஆடல் பாடலுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்த நேரிட்டது. புதுச்சேரியில் உள்ள கோயில்களிலும் தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்த பின்பு, மழை பெய்யத் தொடங்கியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்