தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர மற்றும் ஞாயிறுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும், தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவுநேர ஊரடங்கு மற்றும் வரும் 30ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதலே அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத்தலங்களிலும் வார இறுதிநாட்களில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: ’’உருவக் கேலிகளை அதிகம் சந்திப்பது பெண்களே; நானும் சந்தித்திருக்கிறேன்’’ - தமிழிசை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்