நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. அண்டை மாநிலமாக கர்நாடகாவில் சனி, ஞாயிறுகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் ஜன.16 வரை இயங்க தடை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 18,466 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனாவும், 149 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்றும் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளளன. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், ஹோட்டல்கள், நடன விடுதிகள், கிளப்களில் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அங்கும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களுககான குளிர்க்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய மற்றும் தவிர்க்க முடியாத காரணத்திற்காக விடுப்பில் உள்ளவர்கள் தவிர, மற்ற அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகாரில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில்16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூடவும் உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவது, கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறி என தடுப்பூசிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்