1,000 ரஷ்ய வீரர்களை கொன்றதாக உக்ரைன் இராணுவமும், உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தங்களின் அறிக்கைகள் மூலமாக தெரிவித்துள்ளன
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நிகழ்த்திவரும் சூழலில், 1,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக உக்ரைன் ராணுவம் இன்று அதிகாலை தெரிவித்தது. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்ய ராணுவம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் 80 டாங்கிகள், 516 கவச போர் வாகனங்கள், ஏழு ஹெலிகாப்டர்கள், 10 விமானங்கள் மற்றும் 20 க்ரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் , தொடரும் ரஷ்ய தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளையம், அதன் வீரர்களையும் அழித்துவிட்டதாகக் அறிவித்துள்ளது. கீவ் அவென்யூவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை ரஷ்ய துருப்புக்கள் தாக்கியதாகவும் ஆனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போதுள்ள தலைமையை தூக்கி எறிந்துவிட்டு உக்ரைன் ராணுவம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கான இடம் மற்றும் நேரம் குறித்து விவாதித்து வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்