கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சீர்மரபினருக்கு மொத்தமாக 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதில் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டம் இயற்றியது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த இட ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள ஏராளமான சமூகங்கள் பாதிக்கப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட சட்டத்துக்கு ஆதரவாக தமிழக அரசும், பாமகவும் தொடர்ந்து தங்கள் வாதங்களை முன்வைத்து வந்தன. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்ழக்கை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23-ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.
அதில், "குறிப்பிட்ட சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம். அதுபோன்ற வலுவான காரணங்கள் தெரிவிக்கப்படாததால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது செல்லும்" என தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்