Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2024 நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவுக்கு சாதகமா? சவாலா?

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் திரளாத சூழல் சாதகமாக இருந்தாலும், 2024 பொதுத்தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு சவாலாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கு காரணம் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு பெரும்பாலும் வட மாநிலங்களில் மையம் கொண்டுள்ளதுதான். பெரும்பாலான தென் மாநிலங்கள், நாட்டின் கிழக்கு பகுதி மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு, கட்சியை மக்களவையில் பெரும்பான்மைக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை.

ஒரிசாவில் நவீன் பட்நாயக் வலுவாக தொடர்ந்து வரும் நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியே பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளில் வெற்றி காண்கிறது. அதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கடும் போட்டி காரணமாக பாரதிய ஜனதா கட்சி தனது வெற்றி சதவிகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

image

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் பாஜக வளர்ந்து வருகிறது என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் நம்பிக்கையாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் மக்களவை தேர்தலில் வெற்றி காண்பது இப்போதைய சூழலில் சாத்தியமாக தெரியவில்லை. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிரமாக போட்டியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. இத்தகைய சூழலில் பாரதிய ஜனதா கட்சி தனது மக்களவை வெற்றி கணக்கை ஆந்திர மாநிலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.

இப்படிப்பட்ட தேசிய சூழலில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களை பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் நம்பியுள்ளது. அத்துடன் டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கை மக்களவை தேர்தலில் கிட்டும் எனவும் அந்த கட்சியின் தலைவர்கள் நம்புகிறார்கள்.

இதில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜக மாநிலத்தில் மட்டும் அல்லாது மத்தியிலும் ஆட்சியில் உள்ள நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் நடந்தது போல வெற்றியின் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாரதிய ஜனதா கட்சிக்கு 2019 ஆம் வருடத்தில் கிடைத்த அளவுக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம்.

அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சி கணிசமான வெற்றியை பெற்று வரும் நிலையில், பெரிய அளவில் அங்கிருந்து பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் அதிகரிக்க 2024 ஆம் வருடத்தில் வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே. மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வெல்வதில் ஏற்கனவே அகாலி தளம் மற்றும் சிவசேனா போன்ற கூட்டணி கட்சிகளின் தோழமையை விளைந்துள்ள பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லாதது மற்றும் பல மாநிலங்களில் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு மட்டுமே இருப்பது நிச்சயம் ஒரு சவாலாக இருக்கும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் சவால் கடுமையாக இருக்கும் என்பதும் தேசிய அரசியலில் தற்போதைய வியூகமாக உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்கலாம்: 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் - ஓர் பார்வை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்