உக்ரைனில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ தளவாடங்கள், அரசு அலுவலகங்களை குறி வைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் தலைநகர் கீவின் பாபி யார் மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொலைக்காட்சி நிறுவனத்தின் கருவிகள் பலத்த சேதமடைந்து விட்டதாகவும், தொலைக்காட்சி சேனல் நீண்ட காலத்திற்கு இயங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உளவுத்துறை அலுவலகங்கள் அருகே இருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும் கீவின் நகர்ப்பகுதிக்குள் ரஷ்ய படையை முன்னேறவிடமால் உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவைக் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ள ரஷ்யா, அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் படைகளை முகாமிட வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கீவில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் பீரங்கிகள், ராணுவ வாகனங்களுடன் ரஷ்யா அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கீவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்