உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் அது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது இந்தியா. அதே நேரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த விவகாரத்தில் இந்தியா மவுனம் காப்பது ஏன்? இதை இந்தியா எச்சரிக்கையுடன் கையாளுவதற்கான 5 காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
>உக்ரைன் - ரஷ்யா விவகாரம் இந்தியாவுக்கு கயிற்றின் மீது நடப்பது மாதிரியான சங்கடமான சூழலை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் பழைய நண்பனான ரஷ்யாவின் அழுத்தம், மறுபக்கம் புதிய நண்பர்களான மேற்கு நாடுகளின் அழுத்தம் அதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>இந்தியாவுக்கு தேவைப்படும் ஆயுதங்களை ரஷ்யாதான் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்தியாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா வழங்கியுள்ளது.
>ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 272 Su 30 போர் விமானங்களை இந்தியா இயக்கி வருகிறது. அது தவிர முழுவதும் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 1,300-க்கும் மேற்பட்ட ரஷ்ய t-90 டேங்குகளை இந்தியா வைத்துள்ளது.
>அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதும் நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணையான S-400 -யை வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதற்காக 2018-இல் ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டது.
>இவை அனைத்திற்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நின்றதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருடன் அமெரிக்க அரசின் செயலாளர் அந்தோணி பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, வணிகம், தொழில்நுட்பம் என இந்தியாவுக்கு முக்கிய பார்ட்னராக ரஷ்யா இருந்து வருகிறது.
சீனாவுடன் அமைதியற்ற சூழல் நிலவிய போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது. பிரான்ஸ் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு நட்பு நாடுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்