Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேட்ச்சை மாற்றிய அந்த இரண்டு ஓவர்கள்; பலிக்காமல் போன கே.எல்.ராகுலின் வியூகம்?

ஐ.பி.எல் க்கு புதுவரவாக வந்திருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு அணிகளும் மோதிய ஆட்டம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு காரணமானவர்கள் யார் யார்?அதேமாதிரி, ஸ்கோரை டிஃபண்ட் செய்த போது 15 வது ஓவர் வரை ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கையிலேயே இருந்தது. கடைசி 5 ஓவர்களிலேயே குஜராத் வீறுகொண்டு எழுந்தது. அந்த 5 ஓவர்களில் லக்னோவின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்த தவறு என்ன?


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே முதலில் பேட் செய்திருந்தது. அந்த அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். கே.எல்.ராகுல், டீகாக், எவின் லீவிஸ், மணீஷ் பாண்டே என டாப் 4 மொத்தமும் முதல் 6 ஓவர்களுக்குள்ளேயே காலி. இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் முகமது ஷமி. பவர்ப்ளேயில் மூன்று ஓவர்களை வீசி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். வீசிய முதல் பந்திலேயே கே.எல்.ராகுலை எட்ஜ் எடுத்து அவுட் ஆகியிருந்தார். இவரது Seam மூவ்மெண்டையும் ஸ்விங்கையும் கணிக்கமுடியாமல் பேட்டர்கள் திணறினர். 'Unplayable' டெலிவரிக்களாக வீசிக்கொண்டிருக்கிறார் என ஷமியின் பந்து வீச்சை கமெண்ட்ரியில் கவாஸ்கர் உச்சி முகர்ந்தார். 'ஷமியின் பந்துவீச்சுக்கு ஒரு ஸ்லிப்பெல்லாம் போதாது. இரண்டு ஸ்லிப் வைத்துக் கூட அட்டாக் செய்யலாம்' என மோர்னே மோர்கெல் தன் பங்கிற்கு பாராட்டியிருந்தார். மோர்னே மோர்கெலின் கூற்றுப்படிதான் ஷமியும் வீசியிருந்தார். நேராக சீம் பொசிஷனை வைத்து ஆணி அடித்தாற் போல் ஒரு லெந்த்தை பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அதே லெந்தில் வீச ஸ்விங் கைகொடுத்ததால் விக்கெட்டுகளையும் வேட்டையாடினார்.

Image

பவர்ப்ளே முடியும்போது லக்னோவின் ஸ்கோர் 32-4. மாபெரும் வீழ்ச்சிக்கு அந்த அணி தயாராகிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் பதோனி எனும் அறிமுக வீரரும் கூட்டணி அமைத்தனர். இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம்தான் லக்னோவை போட்டியளிக்கக்கூடிய ஒரு ஸ்கோரை எட்ட வைத்தது.

இருவருமே தொடக்கத்தில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து போகப்போக அப்படியே வேகத்தை கூட்டினர். தீபக் ஹூடா இதே மாதிரியான இன்னிங்ஸ்களை இதற்கு முன்பே ஆடியிருக்கிறார். 22 வயதான அறிமுக வீரரான பதோனியும் முதிர்ச்சியோடு ஆடியதுதான் ஆச்சர்யமளித்தது. 41 பந்துகளில் 54 ரன்களை பதோனி அடித்திருந்தார். இந்த 41 பந்துகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். முதல் 22 பந்துகளில் ஒரு தன்மையோடும் அடுத்த 19 பந்துகளில் வேறொரு தன்மையோடும் ஆடியிருப்பார். இந்த இரண்டு விதமான ஆட்டமுமே லக்னோ அணியை சரிவிலிருந்து மீட்க பெரிய அளவில் உதவியது. பவர்ப்ளேயின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது லக்னோ அணியின் முன் விக்கெட் அழுத்தம் மட்டுமில்லை. ரன்ரேட் அழுத்தமும் இருந்தது. இந்த இரண்டு அழுத்தங்களுக்குமான எதிர்வினை தக்க சமயங்களில் பதோனியிடமிருந்து வெளிப்பட்டிருந்தது. தொடக்கத்தில் விக்கெட்டை விடாமல் தீபக் ஹூடாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைப்பதிலேயே பதோனி குறியாக இருந்தார். மெதுவாக ஆரம்பித்த தீபக் ஹூடா ஒரு கட்டத்தில் கியரை மாற்றி பெரிய ஷாட்களை ஆட ஆரம்பித்தார். அவர் அரைசதத்தை கடக்கும் வரை பதோனி தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ரொம்பவே மெதுவாக தேவைப்படும் நேரங்களில் சிங்கிள் எடுத்து தீபக் ஹூடாவிற்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தே ஆடிக்கொண்டிருந்தார். இப்படியாக ஆடிய முதல் 22 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். தீபக் ஹுடா அடித்து ஆடும்போது இன்னொரு முனையில் நின்று விக்கெட் அழுத்தத்தை போக்கும் வகையில் விக்கெட்டை காத்து ஆடிய பதோனி, தீபக் ஹூடா அரைசதம் அடித்த பிறகு பீஸ்ட் மோடுக்கு மாறினார். முதல் 22 பந்துகளில் 13 ரன்கள், அடுத்த 19 பந்துகளில் 41 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 200+. பல மாதங்களுக்கு பிறகு பந்தை கையில் எடுத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 16 ரன்களை அடித்து வெளுத்தார். 150+ கி.மீ வேகத்தில் சீராக வீசிய ஃபெர்குசனை அவர் தலைக்கு மேலேயே அடித்தார். ரஷீத் கானின் பந்தில் சிக்சர் அடித்த அரிதான பட்டியலிலும் தன் பெயரை இணைத்துக் கொண்டார்.

Image

தீபக் ஹூடா + ஆயுஷ் பதோனி கூட்டணி 87 ரன்களை அடித்திருந்தது. தீபக் கூடா 55 ரன்களையும் ஆயுஷ் பதோனி 54 ரன்களையும் அடித்திருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் திண்டாடிக்கொண்டிருந்த லக்னோ அணி 158 ரன்களை எட்டியது.

குஜராத் அணி 159 ரன்களை சேஸ் செய்ய தொடங்கியது. லக்னோவை போல அந்த அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. சுப்மன் கில் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். விஜய் சங்கர் ரன்களில் வீழ்ந்தார். இருவரின் விக்கெட்டையுமே இலங்கை பௌலரான சமீரா வீழ்த்தியிருந்தார். குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்து கொண்டு பெரிதாக ரன்ரேட்டையும் கருத்தில் கொள்ளாமல் சொதப்பியது. அதிகமாக டாட்கள் ஆடிக்கொண்டிருந்த மேத்யூ வேடும் ஃபினிஷர் ரோலிலிருந்து தன்னைத்தானே நம்பர் 4 க்கு ப்ரமோட் செய்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் தங்கள் வேலையை முழுமையாக செய்து கொடுக்காமல் வெளியேறினர். திவேதியாவும் மில்லரும் க்ரீஸில் இருந்தனர். 15 வது ஓவர் வரை குஜராத்தின் நிலைமை கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. கடைசி 5 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் லக்னோவின் பக்கம் முழுமையாக திரும்புவதை போல தோன்றியது. ஆனால், இங்கேதான் ல்க்னோ கேப்டன் ராகுல் ஒரு ட்விஸ்ட் கொடுக்க இரண்டே ஓவர்களில் கதை மொத்தமாக தலைகீழாக மாறியது.

Image

7-15 இந்த மிடில் ஓவர்களில் கே.எல்.ராகுல் முழுவதுமாக ஸ்பின்னர்களையே பயன்படுத்தினார். ஒரே ஒரு ஓவரை மட்டுமே வேகப்பந்து வீச்சாளருக்கு கொடுத்திருப்பார். க்ரூணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா மூவருமே நன்றாகவே வீசினர். இந்த 9 ஓவர்களில் லக்னோ அணி வெறும் 47 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டம் கடைசி 5 ஓவர்களுக்கு செல்கிறது. ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசியதால் கே.எல்.ராகுல் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை ஓரங்கட்டிவிட்டு ஸ்பின்னர்களையே வீச வைத்தார். அங்கேதான் பிரச்சனையே உருவானது. ராகுல் தொடர்ச்சியாக ஸ்பின்னர்களுக்கே அதுவும் தீபக் ஹூடாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தொடந்து பந்துவீச அழைத்ததற்கு கமெண்ட்ரி பாக்ஸிலேயே கண்டனக்குரல்கள் எழுந்திருந்தது. தீபக் ஹீடா வீசிய 16 வது ஓவரில் மட்டும் 22 ரன்களை வாரி வழங்கியிருந்தார். திவேதியா இந்த ஓவரில் பிரித்து மேய்ந்துவிட்டார். ஸ்பின்னர்களை கொஞ்சம் அதீதமாக பயன்படுத்திவிட்டோம் என்பதை அங்கேயாவது கே.எல்.ராகுல் உணர்ந்திருக்க வேண்டும். பந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கைக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில், வேகப்பந்து வீச்சாளர்களுமே கூட தங்களின் முதல் ஸ்பெல்லில் சிறப்பாக வீசியிருக்கவே செய்தனர். ஆனால், தன்னுடைய முடிவில் பின்வாங்க விரும்பாத ராகுல் மீண்டும் ஒரு ஓவரை ஸ்பின்னருக்கு கொடுத்தார். 17 வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இரண்டு இடதுகை பேட்டர்கள் ஆடும்போது ஒரு லெக் ஸ்பின்னர். வழக்கமாக நல்ல விசாலமாக கூக்ளிக்களை வீசும் ரவி பிஷ்னோய் இந்த முறை அவ்வளவு பெரிய கூக்ளிக்களை வீச தவறவே இந்த ஓவரிலும் திவேதியா + மில்லர் கூட்டணி வெளுத்தெடுத்தது. இந்த ஓவரில் 19 ரன்கள். 7-15 இந்த மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வீசிய 8 ஓவர்களில் 39 ரன்கள்தான் வந்திருந்தது. ஆனால், 16&17 இந்த இரண்டு ஓவர்களில் மட்டுமே இன்னொரு 39 ரன்கள் வந்திருந்தது. அந்த இரண்டு ஓவர்கள் ஆட்டத்தையே மாற்றிவிட்டது. மில்லர் வீழ்ந்தாலும் அபினவ் மனோகரின் துணையுடன் திவேதியா ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல் இல் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Image

முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்தே அந்த முடிவுகள் சரியா தவறா என மதிப்பிடப்படுகிறது. பனித்துளிகளின் தாக்கம் அதிகம் இருந்ததால் வேகப்பந்து வீச்சாளரை விட ஸ்பின்னர்கள் பந்தை நன்றாக கையாள முடியும் என ராகுல் நினைத்திருக்கலாம். அதனால் கூட ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், ராகுலின் அந்த முடிவு லக்னோவுக்கு வெற்றிகரமான விளைவை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்!

-உ.ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்