உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். இதுபற்றி 'புதிய தலைமுறை'க்கு காணொளி ஒன்றையும் அவர்கள் அனுப்பியுள்ளனர்
உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் தங்களைத் தாக்கியதாக இந்திய மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். கார்கிவ் நகரில் தங்களை ரயிலில் ஏற விடாமல் உக்ரைனிய மக்கள் மிதித்துத் தள்ளியதாக, திருச்சியைச் சேர்ந்த மாணவர் கிப்சன், காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்துள்ள போரினால் உயிரைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு, தெளிவான வழிகாட்டுதல்களை அளிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: பிரிட்டன் பிரதமரை நோக்கி பெண் பத்திரிகையாளர் கண்ணீர்மல்க கேள்வி: வைரலாகும் வீடியோ
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்