உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 141 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
ஒரு வாரத்தைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற கோரியும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அவசர கால அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
193 உறுப்பு நாடுகளில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ரஷ்யா, சிரியா, பெலாரஸ், வட கொரியா, எரிட்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன.
உக்ரைன் நிலவரம் மோசமடைந்து வருவது வேதனைக்குரியது என தெரிவித்துள்ள ஐ.நா.சபையின் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என இந்தியா நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியும் ரஷ்யா அதிபரிடம் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளதாகவும், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அவ்விரு நாடுகளின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமாகும் என நம்புவதாகவும் திருமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவற்றைக் கருத்தில் கொண்டே வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகி நிற்பதாகவும் ஐ.நா சபையின் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா உடனே போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட நாடு இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அந்த நாடு மீது உலக அளவிலான அரசியல் அழுத்தம் ஏற்படும். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தினத்தில் உக்ரைனின் கெர்சன் துறைமுகத்தில் வான் வழி தாக்குதல், கார்கிவ் நகரில் ஏவுகணை தாக்குதல் என ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது எளிதா? - உக்ரைன் போடும் திட்டம் பலிக்குமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்