ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்-க்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை அறைந்த சம்பவத்தினை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யும் குழு, வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து விவாதித்தது. இதன்பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் வில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களைப் பாதுகாப்பதையும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டு, ஆஸ்கர் விழா மற்றும் அகாடாமியின் பிற நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு பத்து ஆண்டுகள் தடைவிதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலையில் அமைதியைக் காத்ததற்காக கிறிஸ் ராக்கிற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் நட்சத்திரங்கள் வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரின் தந்தையாக கிங் ரிச்சர்ட் படத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார். அவரது பாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடியை பற்றி தொகுப்பாளரும் நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.
இதன்பின்னர் வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ஆஸ்கர் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்