தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தஞ்சையில் களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அப்படியே நேற்றும் நடந்துள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சரியாக தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது, தேரை சூழ்ந்திருந்த தண்ணீர் காரணமாக உயர் மின் அழுத்த கம்பி மீது உரசி எரிந்துள்ளது. தேரை இழுத்துச்செல்கையில் தேர் சிக்காலமல் இருக்க, உயரத்தில் உள்ள மின் ஒயர்களை அங்கிருந்தவர்கள் ஒழுங்குப்படுத்தியதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி உயரத்தில் மின் ஒயர்கள் இருக்கையில், ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சிப்பகுதி, அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதனால் தேரில் மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதேநேரத்தில், நடக்கும்போது நடப்பதன் சிரமம் தெரியாமல் இருக்க, கால்களிலும் நீரூற்றியபடியே சென்றிருந்திருக்கின்றனர். இதனால் அங்கிருந்த கிட்டத்தட்ட 11 பேருக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: தஞ்சாவூர் சோகம்: தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்ததில் தேர் முற்றிலும் தீப்பிடித்து எரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருக்கும் இந்த விபத்தில், மருத்துவமனையில் மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுதலளிக்கும் விதமாக 50 க்கும் மேற்பட்டோர் தேரிலிருந்து சற்று தள்ளி நின்றுள்ளனர். இதனால் கூடுதல் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இறந்தவர்கள் விவரம்:
விபத்தில் விவசாயி சுவாமிநாதன் (56), முன்னாள் ராணுவ வீரர் பிரதாப் (36) , கோயில் பூசாரி ஆத்தா செல்வம் (56), சிறுவன் ராஜ்குமார் (14) உயிரிழந்துள்ளனர். சிறுவன் பரணிதரன் (13) என்பவரும் உயிரிழந்துள்ளார். போலவே விவசாயி அன்பழகன் (60), அவரது மகன் ராகவன் (24) தேர்திருவிழா விபத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். ஏணி படிக்கட்டு செய்யும் தொழிலாளி நாகராஜன் (60), மோகன் (22), சந்தோஷ் (15), கோவிந்தராஜ் (45) ஆகியோர் உயிரிழந்தனர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் கவலைக்கிடம் எனத் தகவல்கள் தெரிகின்றன. தற்போதைக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணந்தேர் திருவிழா விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில் ஐ.ஜி.யும் ஆய்வு செய்து வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்