சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஆடிய மூன்று போட்டிகளிலும் வீழ்ந்து சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியை அடைந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு சீசன் சிஎஸ்கேவிற்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. ப்ளே ஆஃப்ஸ் கூட தகுதிப்பெறாமல் லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேறியிருந்தது. அந்த 2020 சொதப்பல்கள் மீண்டும் நிகழ்கிறதோ எனும் அச்சத்தில் மஞ்சள் படை இருக்கிறது. பஞ்சாபிற்கு எதிராக சிஎஸ்கே ஏன் தோற்றது? இந்த தோல்வி தொடருமா? 2020 திரும்புமா?
ஸ்கோரை சேஸிங் செய்கிற அணிகளே தொடர்ச்சியாக வெல்லும் ட்ரெண்ட் இந்த சீசனிலும் தொடர்கிறது. சிஎஸ்கே முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஏனெனில், கடந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 200+ ஸ்கோரை எடுத்தபோதும் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருந்தது. பனியின் தாக்கம் காரணமாக பௌலர்களால் சரியாக பந்துவீச முடியவில்லை என்பது காரணமாக கூறப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவின் விருப்பப்படியே ஜடேஜா டாஸை வென்று சேஸிங்கைத்தான் தேர்வு செய்திருந்தார். முதலில் பேட்டிங்க் ஆடிய பஞ்சாபை 200+ ஸ்கோருக்கு செல்ல விடாமல் 180 ரன்களோடு பௌலர்கள் கட்டுப்படுத்திக் கொடுத்தனர். ஆனாலும் சிஎஸ்கே தோற்றிருக்கிறதே. 210 ரன்களையெல்லாம் அணிகள் அசால்ட்டாக சேஸ் செய்யும் நிலையில், சிஎஸ்கே இந்த 181 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் கோட்டைவிட்டிருக்கிறது. 126 ரன்களுக்கு ஆல் அவுட் வேறு ஆகியிருக்கிறது. 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. சிஎஸ்கேவின் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய தோல்வி. எனில், பிரச்சனை எங்கே இருக்கிறது? பேட்டிங்கிலா? அதுதான் இல்லை. பௌலிங், ஃபீல்டிங் எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது. அதுதான் கொடுங்கனவான 2020 சீசன் மீண்டும் திரும்புகிறதோ எனும் அச்சத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது.
பௌலிங்கிலிருந்தே ஆரம்பிப்போம். கடந்த இரண்டு போட்டிகளாக சென்னைக்கு பவர்ப்ளேயில் விக்கெட்டே கிடைத்திருக்கவில்லை. அது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆனால், பஞ்சாபிற்கு எதிராக முதல் ஓவரிலேயே சிஎஸ்கேவிற்கு விக்கெட் கிடைத்தது. முகேஷ் சௌத்ரி பஞ்சாபின் கேப்டனான மயங்க் அகர்வாலை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தியிருந்தார். அடுத்த ஓவரிலேயே பனுகா ராஜபக்சாவை தோனி அட்டகாசமாக ரன் அவுட் ஆக்கினார். ஆக, கடந்த இரண்டு போட்டிகளாக பிரச்சனையாக இருந்த பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் வீழ்த்தாத பிரச்சனை இங்கே தீர்ந்து விட்டது.
ஆனால், விக்கெட்டுகள் கிடைத்ததே ஒழிய இந்த பவர்ப்ளே சிஎஸ்கேவிற்கு சிறப்பானதாக அமையவில்லை. ஏனெனில், 72 ரன்களை சென்னை பௌலர்கள் வாரிக்கொடுத்திருந்தனர். விக்கெட் எடுத்த முகேஷ் சௌத்ரியே அடுத்த 2 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்திருந்தார். லிவிங்க்ஸ்டன் பின்னியெடுத்துவிட்டார். கடந்த போட்டியை போன்றே ப்ராவோ பவர்ப்ளேக்குள்ளாகவே ஓவர் வீச வந்தார். கடந்த இரண்டு சீசன்களாக பவர்ப்ளேயில் ஒரு ஓவரை கூட வீசியிராத ப்ராவோ, இந்த சீசனில் முதல் 3 போட்டிகளிலேயே இரண்டு முறை பவர்ப்ளேக்குள் ஓவரை வீசிவிட்டார். பவர்ப்ளேக்குள்ளேயே ப்ராவோ அழைத்து வரப்படுகிறார் எனும்போதே அணி எதிர்பார்த்த ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
முதல் 10 ஓவர்களில் மட்டுமே பஞ்சாப் 108 ரன்களை அடித்திருந்தது. இடையில் லிவிங்ஸ்டன்னிற்கு ஒரு எளிய கேட்ச்சை அம்பத்தி ராயுடு மிஸ் செய்திருந்தார். கடந்த போட்டியிலும் டீகாக் மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்குமே ஒரு கேட்ச்சை சென்னை வீரர்கள் ட்ராப் செய்திருந்தனர். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அம்பத்தி ராயுடுவின் கேட்ச் ட்ராப்பிற்கு பிறகு லிவிங்ஸ்டன் 15 ரன்களையும் தவானோடு கூட்டாக 27 ரன்களையும்தான் அடித்திருந்தார். ஆனால், 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் நிலையில் இருக்கும் ஒரு அணி தேவையில்லாமல் ஒரு ரன்னை அதிகம் கொடுப்பதே பின்னடைவுதான் எனும்போது அந்த கேட்ச் ட்ராப் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
பாராட்டுக்குரிய வகையில் ப்ரெட்டோரியஸும் கிறிஸ் ஜோர்டனும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசியிருந்தனர். இவர்களின் கட்டுக்கோப்பான யார்க்கர்கள், கட்டர்கள், ஸ்லோயர் ஒன்களால் கடைசிக்கட்டங்களில் பஞ்சாப் அணியால் அவ்வளவு எளிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் பஞ்சாப் அணி 180 ரன்களை மட்டுமே அடித்தது. 12 க்கும் மேல் சென்று கொண்டிருந்த பஞ்சாபின் ரன்ரேட்டை 10 க்கும் கீழ் கொண்டு வந்துவிட்டதால் சென்னை அணி மகிழ்வாகத்தான் இருந்தது. ஆனால், பேட்டிங் பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே நிலைமை மாறியது. பவர்ப்ளேயில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பேட்டிங்கில் பஞ்சாப் அணி குறைவாக எடுத்ததாக நினைத்த ஒரு 20-30 ரன்களை இந்த பவர்ப்ளே பௌலிங் பெர்ஃபார்மென்ஸால் ஈடுகட்டிக் கொண்டது.
பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் இரண்டு இடங்களில் சிஎஸ்கேவின் தோல்வி மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த இரண்டு இடத்திலுமே பஞ்சாப் சார்பில் கொஞ்சம் எதிர்பார்க்கப்படாத ஆட்களே பெர்ஃபார்ம் செய்திருந்தனர். முதலில் வேகப்பந்து வீச்சாளர் வைபவ். அவருக்கு இதுதான் முதல் போட்டி. ஆனால், பவர்ப்ளேயிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையை காலி செய்திருந்தார். உத்தப்பா மற்றும் மொயீன் அலி இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.
அதேமாதிரி, தோனி-சிவம் துபே பார்ட்னர்ஷிப் ஓரளவு பில்ட் ஆகி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் பார்ட் டைமரான லிவிங்ஸ்டன்னிற்கு மயங்க் அகர்வால் தொடர்ந்து ஓவரை கொடுத்தார். பார்ட் டைமருக்கு இவ்வளவு அதிகமாக ஓவர் கொடுப்பது பிரச்சனையாகும். தோனியும் துபேவும் வெளுக்கப்போகிறார்கள் என தோன்றுகையில், அந்த ஓவரிலேயே லிவிங்ஸ்டன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையின் தோல்வியை மீண்டும் உறுதி செய்தார்.
லிவிங்ஸ்டன் கடந்த டி20 உலகக்கோப்பையிலேயே இங்கிலாந்து அணிக்காக சர்ப்ரைஸாக அட்டகாசமாக பந்துவீசியிருந்தார். ஆல் இன் ஒன்னாக ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கூக்ளி எல்லாமே வீசுவார். விரலையும் பயன்படுத்துவார். மணிக்கட்டையும் பயன்படுத்துவார். இவரிடம்தான் சிவம் துபேவும் ப்ராவோவும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்தனர். அந்த 15 வது ஓவரில் சென்னையின் தோல்வி நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டது. ரசிகர்களை மகிழ்விக்க இறங்கி ஆட முயன்ற தோனி லெக் ஸ்பின்னரான சஹாரிடம் வீழ்ந்ததில் ஆச்சர்யமே இல்லை. 18 வது ஓவரிலேயே சென்னை அணி ஆல் அவுட் ஆனது.
மிக மோசமான 2020 ஐ.பி.எல் சீசனில் கூட சென்னை அணி முதல் போட்டியை வென்றிருந்தது. ஆனால், இந்த சீசனில் 3 போட்டிகளில் ஆடிய பிறகும் வெற்றி இல்லை. அந்த சீசனில் அணியின் முக்கியமான வீரரான சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை. அவரின் இடத்தை நிரப்புவதற்கு பல வீரர்களை முயன்று பார்த்து கடைசி வரை அது சாத்தியமே படாமல் சென்னை படுதோல்வியை சந்தித்தது. இந்த சீசனிலும் முக்கித வீரரான பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட் தீபக் சஹார் அணியில் இல்லை. அவரின் இடத்தை நிரப்பும் வீரரை கடந்த 3 போட்டிகளாக சென்னை அணியால் கண்டெடுக்கவே முடியவில்லை.
அதற்குள் பெருத்த சேதாரங்களையும் சென்னை சந்தித்துவிட்டது. அந்த சீசனில் ஓப்பனிங்கில் மொமண்டமே கிடைக்கவில்லை என ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தோனி குமுறுவார். இப்போது ஜடேஜாவும் அதே ஓப்பனிங் மொமண்டம் கிடைக்கவில்லை என்பதையே காரணமாக கூறி வருகிறார். கடந்த சீசனில் ருத்துராஜ் மூன்று அடி வாங்கும் வரை டூப்ளெஸ்சிஸ் நின்று அடித்து சமாளிப்பார். ஆனால், இந்த முறை டூப்ளெஸ்சிஸ் இல்லை என்பது தெரிந்தும் ருத்துராஜ் மூன்று அடி வாங்கிவிட்டுதான் அடிப்பேன் என உறுதியாக இருக்கிறார். பெளலிங் சரியில்லை என பேட்டிங்கை நம்பினால் பேட்டிங் ஓட்டையாகிறது. ஃபீல்டிங் எப்போதும் ஓட்டைதான். பௌலிங்கை பெயருக்குக் கூட நம்பமுடியவில்லை.
இவையெல்லாம் சேர்ந்து 2020 சீசனின் சாயலை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியாது. அந்த சீசனில் 'Too many holes in the Ship' ஒரு பக்கம் சரி செய்தால் இன்னொரு பக்கம் ஓட்டையாகிறது என தோனியே கையை பிசைந்திருப்பார். இந்த சீசனிலும் ஓட்டைகள் அதிகம்தான். ஆனால், 2020 சீசனில் ஓட்டைகளை அடைக்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தீர்வே இருந்திருக்கவில்லை. இங்கே அப்படியில்லை. ருத்துராஜ் எப்போதுமே சீசனை மெதுவாகத்தான் தொடங்குவார். அது அவரின் வழக்கமே. அதுதான் இப்போதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. நான்காவது போட்டியிலிருந்து ருத்துராஜ் விஸ்வரூபமெடுக்கலாம். தீபக் சஹார் முழுமையாக இந்த சீசனிலிருந்து வெளியேறிவிடவில்லை.
கூடிய விரைவிலேயே அவரும் அணிக்கு திரும்பும் வாய்ப்பிருக்கிறது. மொயீன் அலி இரண்டு போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். அதில் ஒன்றில் மிகச்சிறப்பாகவே ஆடியிருக்கிறார். ஆக, அவரும் பெரிய பின்னடைவுகளை சந்திக்காமல் மீண்டு வர வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் நிகழ ஒரு நேரம் தேவைப்படுகிறது. அதனால் அதற்குள் 2020 சீசனை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்!
- உ.ஸ்ரீராம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்