மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே விறுவிறுப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. இப்படித்தான் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அமையும். ஆனால், இந்த முறை இரு அணிகளும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதால், சற்றே வினோதமாக ட்ரோல் ஆகி வருகிறார்கள் சாம்பியன்கள். அதாவது கடைசி இடத்தை பிடிக்க சென்னை, மும்பை அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன என்றே பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான எதிர்பார்ப்புடன் தான் இன்றைய போட்டி பிஒய் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் ஆரம்பமே அமர்களமாக இருந்தது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அவரிடம் நீங்கள் முதலில் பேட்டிங் செய்யலாமே என்று கிண்டலாக ரோகித் கேட்க அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து கேட்ச் மிஸ்ஸிங்கள்
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பவர் ப்ளே முடிவதற்குள் நிறைய சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. முதல் ஓவரிலே கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அசத்தலாக பந்துவீசி இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். முகேஷ் சவுத்திரி.
சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடுகிறதே என்று ரசிகர்கள் மனதில் பாராட்டிக் கொண்டிருக்க, சென்னை வீரர்கள் அடுத்தடுத்து கேட்சுகளை கோட்டை விட்டனர். அதுவும் எளிதான கேட்சுகளை. இதுமட்டுமில்லாமல் தோனியும் தன் பங்கிற்கு ஒரு ஸ்டம்பிங்கை கோட்டை விட்டு ரசிகர்களை கடுப்பேற்றினார். மும்பை அணி 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துவிட்ட போது, சென்னை அணி வீரர்களின் மோசமான பீல்டிங்கால், ஸ்கோர் நிதானமாக ஏறியது. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் சென்னை வீரர்களின் மிஸ்டேக் நிற்கவில்லை. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு155 ரன்கள் எடுத்தது.
அரைசதம் அடித்த திலக் சர்மா
மும்பை அணியில் மற்ற முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கம் திலக் சர்மா மட்டும் பொறுப்புடன் விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். சூர்ய குமார் சற்று நேரம் அதிரடி காட்டி 32 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் முகேஷ் சவுத்திரி 3, பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் பந்திலே கெய்க்வாட் விக்கெட்
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு முதல் பந்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலே சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இந்த சீசனின் சோதனையை மீண்டும் தொடர்ந்தார். அடுத்து வந்த சாண்ட்னரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். உத்தப்பாவும், ராயுடுவும் சற்று நேரம் நிதானம் காட்டி முறையே30, 40 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது சென்னை அணி. துபே 13 ரன்களிலும், கேப்டன் ஜடேஜா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணிக்கு அழுத்தம் அதிகமானது.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை:
சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சிறிது நேரம் அதிரடியாக விளையாடி வந்த ட்வைன் ப்ரிடோரியஸ் உனட்கண்ட் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்திலே எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு சிங்கிள் மட்டும் எடுக்க, கடைசி 4 பந்துகளில் சென்னை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி இருக்கிறார்.
அந்த ஓவரில் மூன்றாவது பந்தினை சிக்ஸர் பறக்கவிட்டார் தோனி. இதனால் சென்னை ரசிகர்கள் சற்றே உற்சாகமடைந்தனர். அடுத்த பந்திலேயே பவுண்டரில் விளாசி மேலும் உற்சாகத்தை அதிகப்படுத்தினார் தோனி. கடைசி இரண்டு பந்துகளில் வெறும் 6 ரன்கள்தான் தேவை. சரி சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடிப்பார் என நினைத்தால் அந்த பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால், கடைசி பந்தில் 4 ரன்கள் என்ற நிலை. இரண்டு அணி ரசிகர்களின் இதயங்களும் அந்த கணம் படபடப்பின் உச்சத்திற்கு சென்று இருக்கும். தோனி உனாட்கண்ட் வீசிய யார்க்கர் பந்தினை லெக் சைடில் தட்டிவிட்டு கூலாக பவுண்டரியாக மாற்றினார்.
சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றி.தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் மைதானத்திலேயே ரோகித் சர்மா முட்டி போட்டபடி தரையில் முகத்தை வைத்துக் கொண்டார்.
மும்பை அணிக்கு இது 7 ஆவது தொடர் தோல்வி. தோனி தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் ஒருமுறை நீரூபித்துள்ளார். போட்டியை முடித்து தோனி வெளியே வந்து கொண்டிருந்த போது அவருக்கு சலாம் என வணக்கம் போட்டார் ஜடேஜா.
கிரிக்கெட் உலகில் சிறந்த ஃபினிஷர் என்று பெயர் எடுத்தவர். அந்த பெயரினை அவர் மீண்டும் ஒரு முறை நிலைநாட்டியுள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். பல மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர். அதில், கே.ஜி.எஃப் படத்தில் வைலன்ஸ்.. வைலன்ஸ் என்ற டயலாக்கை மாற்றி பினிஷிங்.. பினிஷிங் என்ற ட்ரோல் செய்கிறார்கள்.
தோனி விளாசிய பவுண்டரிகள், சிக்ஸர்களை காண இங்கே க்ளிக் செய்யவும்.. https://twitter.com/NainaKishor_/status/1517208373913030656
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்