தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் விலக்கு, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ் நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட நிலுவையிலுள்ள சுமார் 21ஆயிரம் கோடி ரூபாயை விரைந்து வழங்க வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நேற்று அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்ற பெயரிலான திமுக அலுவலகத்தை, கட்சியின் கொடியை ஏற்றி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் குத்துவிளக்கேற்றினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 'Karunanidhi A Life' என்ற புத்தகம் வெளியிடப்பட்டு, சோனியா காந்திக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல, திராவிட அரசியல் பயணத்தை விளக்கும் 'A Dravidian Journey' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
திமுக அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு நினைவுப்பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
இதையும் படிக்க: ’சொத்துவரியை உயர்த்திய திமுக அரசை எதிர்த்து ஏப்.5ம் தேதி ஆர்ப்பாட்டம்’ - அதிமுக அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்