கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஹலால் செய்து விற்கும் இறைச்சியை இந்துக்கள் யாரும் வாங்கக் கூடாது என்று இந்துத்துவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடா்பாக சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்புகளால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்க வேண்டாம் என கூறி பஞ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்ராவதியில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஹலால் இறைச்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர் ஒருவக்கும் பஜ்ரங் தள் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் அந்த கடைக்காரரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் ஷிவமொக்கா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹலால் இறைச்சிக்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்து மாநில அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை கூறியிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதனிடையே பயோகான் நிறுவனத் தலைவா் கிரண் மஜும்தாா் ஷா தனது ட்விட்டா் பதிவில், ''மதவாதப் புறக்கணிப்புகளை கா்நாடகா அரசு அனுமதிக்கக் கூடாது. வளா்ந்து வரும் மதப்பிளவுகளை தயவுசெய்து தடுத்து நிறுத்துமாறு முதல்வா் பசவராஜ் பொம்மையை கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கு பதிலளித்து முதல்வா் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிடுகையில், ‘மாநிலத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதத்திற்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்டவா்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இத்தனை ஆண்டுகளாக நமது நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் நமது வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறோம்.
அமைதி மற்றும் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அமைதிக்கும், வளா்ச்சிக்கும் போ் போனது கா்நாடகம். அதற்கு குந்தகம் விளைவிக்கும் போக்கைத் தவிா்த்து, கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதையும் படிக்க: 'ஹலால் உணவும் ஒரு வகையான ஜிஹாத்தான்' - பாஜகவின் சி.டி.ரவி சர்ச்சை கருத்து
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்