கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
"இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் பல்வேறு வகையான எரிபொருட்களின் மொத்த விநியோகம் இப்போது 2,70,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உள்ளது" என்று இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், சனிக்கிழமையன்று, இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடனுக்கு 40,000 டன் டீசலை இந்தியா வழங்கியது.
மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு நகரங்களில் மக்கள் திரளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டில் எரிபொருள், உணவு போன்ற பொருட்களுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர், இதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் தினமும் 13 மணிநேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் நாணய இருப்பு 70 சதவீதம் சரிந்து 2.31 பில்லியன் டாலராக உள்ளது. ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச சாவரின் பத்திரம் உட்பட, இந்த ஆண்டு முழுவதும் சுமார் 4 பில்லியன் டாலர் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழலில் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்