தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்பதை வலியுறுத்தும் விதமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அன்றைய தினம் சபாநாயகர் ஓம் பிர்லா அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாததால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பும் செய்தனர்.
இந்நிலையில் ஆளுநர் ரவி, திடீர் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் பின்னனி தற்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றது. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ரவி டெல்லி செல்வதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்திருந்தார். மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காத ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் போராட்டமும் நடத்தியிருந்தனர். இந்த சூழலில் ஆளுநரின் டெல்லி பயணம் உற்று நோக்கப்படுகிறது.
சமீபத்திய செய்தி: ஐபிஎல் நடத்தை விதிமீறல் - நிதிஷ் ராணாவுக்கு அபராதம்; பும்ராவுக்கு 'வார்னிங்'
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்