Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடர் தோல்விகள்; மும்பைக்கு என்னதான் ஆச்சு?

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலுமே மும்பை அணி முதல் போட்டியில் தோற்பது வழக்கமான விஷயம். முதல் போட்டியில் தோற்றால்தான் இறுதியில் சாம்பியன் ஆவோம் என ரசிகர்களும் இதை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள். இந்த சீசனிலும் மும்பை முதல் போட்டியில் தோற்றது. ஆனால், தோல்வி முதல் போட்டியோடு நிற்கவில்லை. இரண்டாம் போட்டிக்கும் தொடர்ந்திருக்கிறது. தோல்வி என்பதை விட மும்பை தோற்கும்விதம் ரசிகர்களை இன்னும் அதிகமாக வருத்தமடைய செய்திருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மும்பை ஆடி முடித்திருக்கிறது. இரண்டு போட்டியிலுமே ஒரு கட்டத்தில் ஆட்டம் மொத்தமும் மும்பையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த நொடியில் மும்பை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் இருந்தது. ஆனால், கடைசிக்கட்டத்தில் எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கடுமையாக சொதப்பி மும்பை தோற்றிருக்கிறது.

image

டெல்லிக்கு எதிரான போட்டியில் 177 டார்கெட்டை டிஃபண்ட் செய்தபோது கிட்டத்தட்ட 15 வது ஓவர் வரை ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. ஆனால், அடுத்த மூன்றரை ஓவர்களில் நிலைமை மாறியது. 16 வது ஓவரிலிருந்து 18.2 வரை இந்த 3.2 ஓவர்களில் மட்டும் 57 ரன்களை வாரிக்கொடுத்து டெல்லியை வெற்றி பெற வைத்திருந்தனர். குறிப்பாக, டேனியல் சாம்ஸ் மற்றுன் பாசில் தம்பி வீசிய இரண்டு ஓவர்களில் மட்டுமே 37 ரன்கள் சென்றிருந்தது.

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியிலுமே 193 ரன்களை சேஸ் செய்த போது 15 வது ஓவர் வரை ஆட்டம் சமமாகவே சென்று கொண்டிருந்தது. பேட்டிங்கின் போது ராஜஸ்தான் அணி பவர்ப்ளேயில் 48-2 என்றும் 7-15 மிடில் ஓவர்களில் 90-1 என்றும் ஸ்கோர் செய்திருந்தது. மும்பையும் கிட்டத்தட்ட இதே அளவிலேயே ஸ்கோர் செய்திருந்தது. பவர்ப்ளேயில் 50-2 என்றும், 7-15 மிடில் ஓவர்களில் 86-2 என்றும் ஸ்கோர் செய்திருந்தது. இரண்டு அணிகளுக்குமான வித்தியாசம் அந்த கடைசி டெத் ஓவர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் 55-5 என ஸ்கோர் செய்திருந்தது. ஆனால், மும்பை 34-4 என்ற அளவிலேயே ஸ்கோர் செய்திருந்தது. கடைசிக்கட்ட ஓவர்களில் துண்டு விழுந்த இந்த 20-25 ரன்கள்தான் மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

image

இந்த ஓவர்களில் மும்பையின் அசகாயசூரரான பொல்லார்ட் க்ரீஸிலேயேத்தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொல்லார்டை ஸ்ட்ரைக்கில் வைத்துக் கொண்டு கடைசி 2 ஓவர்களில் பிரசித் கிருஷ்ணாவும் நவ்தீப் சைனியும் ஒரு சம்பவமே செய்துவிட்டனர். மேட்ச் வென்று கொடுப்பார் என நினைக்கப்பட்ட பொல்லார்டால் கொஞ்சம் அதிரடியாக கூட ஆடியிருக்க முடியவில்லை. டெத் ஓவரில் வேகமெடுத்து விரட்ட வேண்டிய சமயத்தில் பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 91 ஆகத்தான் இருந்தது. விளைவு, மீண்டும் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஆட்டம் கைநழுவிப் போனது.

பவர்ப்ளே-டெத் என எல்லா சமயங்களிலும் பும்ராவையே நம்பியிருக்கும் சூழல் மாற வேண்டும். அக்சர் படேல், லலித் யாதவ் தொடங்கி  ஹெட்மயர் வரை அத்தனை பேரும் வெளுத்தெடுக்கும் டெத் ஓவர் பந்துவீச்சும் இன்னும் மேம்பட வேண்டும். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் வந்தால் அணி இன்னும் வலுப்படும். பொல்லார்டுக்கு உதவியாக இருக்க அழைத்து வரப்பட்ட டிம் டேவிட் ஒரு தரமான வீரர்தான். ஆனால், ஐ.பி.எல் இல் இன்னமும் தனது சாகசத்தை காட்டாமல் இருக்கிறார். அவர் ஃபார்முக்கு வந்தால் டெத் ஓவர்களில் பொல்லார்டின் மீதான அதீத அழுத்தம் குறையும். டேனியல் சாம்ஸுமே பேட்டிங் ஆடக்கூடியவர்தான். ஆனால், அவர் பௌலிங்கில் கட்டுக்கோப்பாக வீசினால் அதுவே பெரிய உதவியாக இருக்கும்.

image

இதையெல்லாம் தாண்டி மும்பை ஆடியிருக்கும் 2 போட்டிகளிலுமே அவர்களுக்கு மற்ற அணிகளுக்கு கிடைக்காத ஒரு சௌகரியம் கிடைத்திருந்தது. அதாவது, மும்பை ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளுமே மாலை நேரத்தில் நடந்தவை. இந்த ஐ.பி.எல் தொடரில் இரவு நேரங்களில் பனியின் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பௌலர்கள் சரியாக பந்துவீச முடியவில்லை. டெத் ஓவர்களில் பந்தை சரியாக கையில் பிடிப்பதே பிரச்சனையாக இருக்கிறது. இதனால் ஆட்டம் மொத்தமுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. குறிப்பாக, ஸ்கோரை சேஸ் செய்யும் அணிகள் எளிதில் வென்றுவிடுகின்றன. இதை ஒவ்வொரு போட்டியிலுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஈரப்பதத்தின் தாக்கத்தினால் வெல்ல வேண்டிய போட்டிகளை கூட சில அணிகள் தோற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதெல்லாம் இரவில் மட்டும்தான். மாலை வேளையிம் இந்த பிரச்சனையே இல்லை. ஆக, மாலை நேரத்தில் ஆடிய இந்த போட்டிகளை மும்பை வென்றிருந்தால் மும்பைக்கு அது மிகப்பெரிய நல்ல விஷயமாக அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை மும்பை தவறவிட்டிருக்கிறது.

சவால்களை எதிர்கொண்டு சாதிப்பது மும்பைக்கு ஒன்றும் புதிதல்ல. சில சீசன்களில் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறுவார்களா எனும் சந்தேகத்திலிருந்து சாம்பியனாக உருமாறியிருக்கிறார்கள்ஆக, மும்பை இந்த சறுக்கலிலிருந்தும் மீளுவார்கள் என நம்புவோம்.

- உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிஎஸ்கே? - பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்சை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்