சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பேரம் பேசி காவல்நிலைய மரணத்தை மறைக்க முயன்றதாக அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி நள்ளிரவில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, விக்னேஷ் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இறந்த விக்னேஷூக்கு தாய்தந்தை இல்லாதநிலையில் சகோதரர்கள் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்து வந்துள்ளார். விக்னேஷின் உடல், அவரது அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விக்னேஷ் உடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் யார்? அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து மாட்டாங்குப்பத்தில் சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வரும் அவரது தாயார் கற்பகத்தை நீண்ட தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து பேசினோம். சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் சுரேஷ் சென்னை வந்ததாகவும், விக்னேஷ் உடன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டதை பல காவல்நிலையம் ஏறி தெரிந்துகொண்டதாகவும் கூறிய கற்பகம், விக்னேஷ் இறப்பை மறைக்க அவரது முதலாளி மூலம் காவல்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தது தெரியவந்ததாகக் கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், விக்னேஷ் உடன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுரேஷிற்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 10 மாதங்களில் எட்டு காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்