மதுரை மாநகராட்சி விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரத்தில் மாநகராட்சிக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என மதுரை மேயர் இந்திராணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த தனது அறிக்கையில், “மதுரை மாநகராட்சியின் ஒப்பந்த நிறுவனமாகிய VRG Constructions பிரைவேட் லிமிடெட் ஒப்பந்த தொழிலாளர்களான சிவக்குமார் (வயது 45), சரவணக்குமார் (வயது 33), லட்சுமணன் (வயது 32) ஆகியோர் ஏப்ரல் 21ம் தேதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 21 இரவு 9 மணியளவில் நேரு நகர் வார்டு 70-ல் அமைந்துள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்ய 4 தொழிலாளர்கள் சென்றபோது ஏற்பட்ட விபத்தால் மூவர் இறந்துள்ளனர். மற்றொருவரான கார்த்திக், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு வேதனையான சம்பவம். இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் வலியை விளக்க வார்த்தைகள் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களை என் நினைவில் வைத்து, அவரது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அறிவித்துள்ள நிவாரண தொகை மொத்தம் 10 லட்சத்தில் தற்போது 5 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இறந்த நபரின் உரிமையுள்ள சட்டப்பூர்வ வாரிசைக் கண்டறிந்த பிறகு மீதமுள்ள 5 லட்சம் வழங்கப்படும். நினைத்துப் பார்க்க முடியாத இந்த இழப்பால் வாடும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அனைத்து முயற்சிகளையு,ம் மேற்கொள்வோம்.
இந்நிகழ்வு தொடர்பான தகவல்கள் இன்னும் தெளிவு பெறாத காரணத்தால், நாம் சரியான விசாரணையை மேற்கொள்ள தேவை உள்ளது. இந்த சம்பவம் நேர்ந்ததற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதற்கும் நாம் உடனடியாக இதுகுறித்த விசாரணையைத் தொடங்குவோம். இதுபோன்ற அலட்சியப் போக்கிற்கான காரணங்களை கவனமாக ஆய்வு செய்து முழுமையனா அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து ஊழியர்களும் அவர்கள் பணியை செய்யுபோது மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற ஒரு சோக நிகழ்வு ஒருபோதும் நடக்கக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழலை தவிர்க்கவும் மேலும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆய்வு அறிக்கை இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார் மேயர் இந்திராணி.
சமீபத்திய செய்தி: சிக்ஸர் மழை பொழிந்து பயம் காட்டிய ரஸல்.. இறுதியில் கெத்தாக வெற்றி பெற்ற குஜராத் அணி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்