நடப்பு சீசனில் 15 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணியால் ரீட்டைன் செய்யப்பட்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி 3 கோல்டன் டக் அவுட்டாகி, 341 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் 2வது தகுதிச் சுற்று வரை வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தானிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. முக்கியமான இந்தப் போட்டியில் விராட் கோலி வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை வருடங்களாக சதம் அடிக்காத விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
16 ஆட்டங்களில் இரண்டு அரைசதங்கள் உட்பட 341 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.73. பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியே குறைவான ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர் அடித்த இரண்டு அரைசதமும் நடப்பு சீசனில் வலுவான அணியாக விளங்கும் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராவை என்பது சற்றே ஆறுதல்.
விராட் கோலி பேட்டிங் செய்யும் விதம் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமாகவே இருந்தது. இது விராட் கோலி தானே என்று எண்ணும் அளவிற்கு மோசமாக இருந்தது. வழக்கமாக விராட் கோலி நீண்ட நேரம் களத்தில் இருந்தால் ஜெட் வேகத்தில் ரன் கூடும். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கும். ஆனால், இந்த முறை எல்லைக்கோட்டிற்கு வெளியே பந்தை விரட்ட அவர் மிகவும் சிரமப்பட்டார். தான் சந்தித்த பந்துகளை விட குறைவான ரன்களை கூட சில போட்டிகளில் அடித்தார். அவரது நிதானமான ஆட்டம் சில போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கு கூட வித்திட்டது. ஒரு சில போட்டிகளில் அரைசதம் அடித்து தான் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பி விட்டேன் என்று சொல்வது போல் இருந்தது. ஆனால், அதுவும் அந்தப் போட்டியுடன் முடிந்துவிட்டதால் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.
இதில் சோகம் என்னவென்றால் மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆனார் என்பதுதான். ஒரு போட்டியில் டக் அவுட் என்றால் ரசிகர்கள் தாங்கிக் கொள்வார்கள் மூன்று என்றால் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானே இருக்கும். தங்களது பேவரட் பேட்ஸ்மேன் இப்படி ரன் கணக்கே துவங்காமல் பெவிலியன் திரும்புகிறாரே என்று.
கடந்த 2016ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4 சதம் உட்பட 973 ரன்கள் குவித்த விராட் கோலி, ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக வலம் வருகிறார். இந்த சாதனையை இன்னும் எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஐபிஎல் சீசனிலாவது விராட் கோலி மீண்டும் பல பார்ம்க்கு திரும்பி பேட்டிங்கில் அசத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாம்: ”தோற்றாலும் எங்களை ஆதரிக்கிறீர்கள்” - ரசிகர்களுக்கு கோலியின் உருக்கமான பதிவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்